இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவரின் தந்தை வீடு புகுந்து வெட்டிக் கொலை.. பீகாரில் பரபரப்பு
- பீகார் மாநிலத்தில் 12 சதவீதம் மக்களை உள்ளடக்கிய OBC பிரிவில் உள்ள சமூகத்தை சேர்ந்த முகேஷ் சஹானி அம்மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறார்.
- கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக முகேஷ் சஹானி பொறுப்பு வகித்தவர் ஆவார்.
பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விகாஷீல் இன்சான் கட்சியின் [VIP] தலைவர் முகேஷ் சஹானியின் தந்தை வீடு புகுந்து மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் 12 சதவீதம் மக்களை உள்ளடக்கிய OBC பிரிவில் உள்ள சமூகத்தை சேர்ந்த முகேஷ் சஹானி அம்மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக முகேஷ் சஹானி பொறுப்பு வகித்தவர் ஆவார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இருந்த சஹானி அங்கு ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு வந்தார்.
தற்போது முகேஷ் சஹானி மும்பை சென்றுள்ளார். அவரது தந்தை ஜிதன் சஹானி பீகாரின் தார்பங்கா மாவட்டத்தில் சுபால் பஜார் பகுதியில் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஜிதன் சஹானியை கட்டிலில் வைத்து கூர்மையான ஆயுதங்களால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.
அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த போலீசார் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜிதன் சஹானியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசியல் காரணங்களால் இந்த கொலை நடந்துள்ளதா அல்லது முன்விரோதம் காரணமாகவா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.