திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான தங்க அபிஷேக சங்கு காணிக்கை
- திருப்பதி கோவிலில் இன்போசிஸ் தலைவரும் முன்னாள் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினருமான சுதா நாராயணமூர்த்தி தரிசனம் செய்தார்.
- திருப்பதி கோவிலில் நேற்று 64,003 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திலும், இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று ஏழுமலையான் கோவிலில் இன்போசிஸ் தலைவரும் முன்னாள் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினருமான சுதா நாராயணமூர்த்தி தரிசனம் செய்தார். அவர் ரூ.1½ கோடி மதிப்பிலான தங்க அபிஷேக சங்கை முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டியிடம் வழங்கினார்.
திருப்பதியில் நேற்று தரிசனத்திற்கு வந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கிழக்கு மாட வீதியில் நடந்து வந்தார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இருந்தவர்கள் முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அஸ்வினி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை.
திருப்பதி கோவிலில் நேற்று 64,003 பேர் தரிசனம் செய்தனர். 24,659 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.