மத்திய கல்வித்துறை அமைச்சருடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
- நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் சந்தித்து பேசினார்.
- சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய கல்வி அமைச்சருடன் கவர்னர் சந்தித்து உள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். இது அவரது தனிப்பட்ட முறையிலான பயணம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.
அப்போது, 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கவர்னர் அவரிடம் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
நேற்று பிரதமரை கவர்னர் சந்தித்த நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசி உள்ளார்.
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய கல்வி அமைச்சருடன் கவர்னர் சந்தித்து உள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் பதிவில்,
நான் மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் ஜி அவர்களை சந்தித்து, தமிழகத்தில் உயர்கல்வியை உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றி விவாதித்தேன். திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நல்வாழ்வில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு மிகவும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.