இந்தியா

வாத்வான் துறைமுக திட்டம்- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2024-08-30 07:01 GMT   |   Update On 2024-08-30 07:01 GMT
  • தேசிய கப்பல் தகவல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்பை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
  • இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக திகழும்.

மும்பை:

பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார். காலை மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடந்த உலகளாவிய பின்டெக் 2024 விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் மதியம் பால்கரில் உள்ள சிட்கோ மைதானத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பில் பால்கர் மாவட்டத்தில் தஹானு நகருக்கு அருகே உள்ள வாத்வான் துறைமுக திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். சுமார் ரூ.1,560 கோடி மதிப்புள்ள, 218 மீன்வளத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் ரூ.360 கோடி செலவில் தேசிய கப்பல் தகவல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்பை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நீர்வாழ் பூங்காக்களை மேம்படுத்துதல், மறுசுழற்சி நீர்வாழ் உயிரி வளர்ப்பு முறை போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை தொடங்கி வைக்க உள்ளார்.

மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், மீன் சந்தைகள் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய மீன்வள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ள வாத்வான் துறைமுகத்தில் பெரிய கப்பல் வந்து நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உலகத் தரம் வாய்ந்த கடல்சார் நுழைவாயிலை நிறுவுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக திகழும். மேலும், சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு நேரடி இணைப்பை வழங்குவதோடு, போக்குவரத்து நேரங்களையும், செலவுகளையும் குறைக்கும்.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட இந்த துறைமுகம், ஆழமான நிறுத்துமிடங்கள், திறமையான சரக்கு கையாளும் வசதிகள் மற்றும் நவீன துறைமுக மேலாண்மை அமைப்புகள் துறைமுகத்தில் இருக்கும்.

இந்த துறைமுகம் இந்தியாவின் கடல்சார் போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, உலகளாவிய வர்த்தக மையமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தும்.

Tags:    

Similar News