VIDEO: பேரம் பேசாம பணத்தை எடுத்து வை.. மருந்து கடையில் லஞ்சம் - தொக்காக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்
- ஏய்... நான் சொல்றதைக் கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது.
- கடை நடத்துனமா வேண்டாமா? நேரடியாக எஃப்.ஐ.ஆர் போடும் அளவுக்கு உங்க கடையில் நிறைய குறைகள் இருக்கு
உத்தரப் பிரதேசத்தில் மெடிக்கல் ஷாப் கடைக்காரரிடம் பெண் மருந்து ஆய்வாளர் [Drug inspector] ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்த மருந்து ஆய்வாளர் நிதி பாண்டே, மருந்தகம் ஒன்றில் ஆய்வு செய்தபோது உரிமையாளரிடம் லஞ்சம் கேட்கிறார்.
'ஏய்... நான் சொல்றதைக் கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது. எவ்வளவு சொன்னாலும் செய். கடை நடத்துனமா வேண்டாமா? நேரடியாக எஃப்.ஐ.ஆர் போடும் அளவுக்கு உங்க கடையில் நிறைய குறைகள் இருக்கு' என்று அவர் மருந்தக உரிமையாளரிடம் லஞ்சப் பணத்துக்கு பேரம் பேசுவது பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ பரவியதை தொடர்ந்து டிசம்பர் 30 ஆம் தேதி பாண்டே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்குதல் மற்றும் பேரம் பேசுதல், வியாபாரியை அச்சுறுத்தல் மற்றும் வியாபாரத்திற்கு இடையூறு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் உ.பி. வருவாய், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் முதன்மை செயலர் பி.குருபிரசாத் இந்த பணிநீக்க உத்தரவை பிறப்பித்தார்.
இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளை பாண்டே மறுத்துள்ளார். தனியார் ஊடகத்திடம் பேசிய அவர், வைரலாகும் வீடியோ முற்றிலும் போலியானது. இது வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ. அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.