அதானியை பா.ஜனதா இவ்வளவு தீவிரமாக பாதுகாப்பது ஏன்?: ராகுல் காந்தி கேள்வி
- பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முற்றிலும் முடங்கியது.
- ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
புதுடெல்லி :
அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகள் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் அரசியல் புயலை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்த பிரச்சினையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முற்றிலும் முடங்கியது.
அதானி நிறுவன பிரச்சினையில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
இந்த நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர், 'உண்மையான கேள்வி என்னவென்றால், அதானியை பா.ஜனதா இவ்வளவு தீவிரமாக பாதுகாப்பது ஏன்? என்பதாகும்' என்று நேற்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக அவர், அதானி விவகாரத்தில் தான் யாருக்கும் அஞ்சமாட்டேன் என்றும், அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயான உறவு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.
பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோதே அதானியுடனான அவரது உறவு தொடங்கி விட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.