இந்தியா

புல்டோசரால் இடித்த வீட்டை மீண்டும் அரசே கட்டிக்கொடுக்க உத்தரவிடுவோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி

Published On 2025-03-06 19:44 IST   |   Update On 2025-03-06 19:44:00 IST
  • குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு பாஜக அரசு இடித்து வருகிறது.
  • புல்டோசரால் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி பாஜக அரசுகள் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்தன.

இந்நிலையில், பிரயாக்ராஜில் ஒரு வழக்கறிஞர், ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று பேரின் வீடுகளை இடித்ததற்காக உத்தரபிரதேச அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடுகளை இடிக்கும் பாஜக அரசுகளுக்கு எதிரான வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மனுதாரர்களான வழக்கறிஞர் சுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது மற்றும் 3 பேர் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது "பாஜக அரசால் இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் அரசுக்கு உத்தரவிடுவோம், இதைச் செய்வதற்கான ஒரே வழி அதுதான்" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, இந்த வழக்கை மார்ச் 21 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News