ஆண்களும் கொடுமையை எதிர்கொள்கின்றனர்- விவாகரத்து வழக்கில் பெண் நீதிபதி அதிரடி கருத்து
- ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
- வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
கர்நாடகா மாநிலத்தில் பெண் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி, விவாகரத்து வழக்கை மாற்றக் கோரிய மனைவியின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் (HC) நிராகரித்துள்ளது.
ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
நீதிபதி சிலாகூர் சுமலதாவின் ஒற்றை நீதிபதி அமர்வு இதுகுறித்து கூறுகையில், " உண்மையில், பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் அதற்காக பெண்களின் கொடுமையால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று அர்த்தமல்ல. எனவே, சமூகத்தில் பாலின-நடுநிலை அவசியம் உள்ளது."
விவாகரத்து மனுவை, சிக்கமகளூரு மாவட்டம், நரசிம்மராஜபுராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திலிருந்து, சிவமோகா மாவட்டம், ஹோசனகராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுதாரர் மனைவி கோரினார்.
அந்த மனுவில், "நீதிமன்ற விசாரணைகளில் தவறாமல் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து நரசிம்மராஜபுரத்திற்கு 130 கிலோமீட்டர் தூரம் வருவதற்கு பல சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டி இருப்பதாக" குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை எதிர்த்த கணவர்," தான் ஒன்பது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு மைனர் குழந்தைகளையும் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறேன்.
வழக்கை மாற்றுவது தனக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் என்றும், இது குழந்தைகளின் வழக்கத்தை சீர்குலைக்கும் என்றும், அன்றாடப் பொறுப்புகளை நிர்வகிப்பதில் தனது சிரமங்கள் அதிகரிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தந்தையின் பராமரிப்பில் இருந்த குழந்தைகளின் நலன் உட்பட ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும் நீதிமன்றம் மதிப்பிட்ட நிலையில், "மாற்று மனுவை ஒரு பெண் தாக்கல் செய்வதால் மட்டுமே, கோரப்பட்டபடி வழக்கை மாற்ற முடியாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
"பிரதிவாதி- கணவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வதாலும், குழந்தைகள் அவரது பாதுகாப்பு இருப்பதாலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் கணவர் எதிர்கொள்ளும் சிரமம் மனுதாரர் மனைவியை விட அதிகமாக இருக்கும்" என்று கூறி கணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
மேலும், "சமத்துவம் அதன் உண்மையான அர்த்தத்தில் இருக்க வேண்டும், இரு பாலினத்தையும் பாதிக்கக்கூடாது. பெண்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகள் எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், நமது சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் கவனிக்காமல் விடக்கூடாது," என்று நீதிமன்றம் குறிப்பிட்டதது.
இதன் விளைவாக, வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.