சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டாரா? அல்லது நடித்தாரா?: மகாராஷ்டிரா அமைச்சர் பகீர்...
- சைஃப் அலி கான் வீட்டிற்குள் நுழைந்த நபர் கத்தியால் தாக்கினார்.
- சைஃப் அலி கான் மீது 6 இடங்களில் காயம் ஏற்பட்டது.
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டிற்குள் நுழைந்த நபர், சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கழுத்துப் பகுதியை கத்தி பயங்கரமாக தாக்கியிருந்தது. முதுகெலும்பு அருகே கத்தி குத்து விழுந்தது. மொத்தம் 6 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது.
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சைஃப் அலி கான் வீடு திரும்பிய நிலையில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதிஷே் ரானே, கத்திக் குத்து குறித்து பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் நிதேஷ் ரானே கூறியதாவது:-
சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது நடனம் ஆடினார். அவர் குத்தப்பட்டாரா? அல்லது நடித்தாரா? என்று சந்தேகிக்கிறேன். மும்பையில் வங்கதேசத்தினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
அவர்கள் சைஃப் அலி கான் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். முன்னதாக அவர்கள் சாலையை கடக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். தற்போது வீட்டிற்குள் நுழைய தொடங்கிவிட்டார்கள். ஒருவேளை சைஃப் கானை கடத்திச் செல்ல வந்திருக்கலாம். அது நல்லது.... குப்பைகளை அகற்ற வேண்டும்.
சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது பார்த்தேன். அவர் கத்தியால் குத்தப்பட்டாரா? அல்லது நடித்தாரா? என்று சந்தேகம் அடைந்தேன். நடந்து சென்றபோது, நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.
இவ்வாறு நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.
மேலும் ஷாருக் கான் அல்லது சைஃப் அலி கான் போன்ற எந்தவொரு கானும் காயப்படும்போதெல்லாம் என்.சி.பி. தலைவர்கள் ஜிதேந்திர அவாத், சுப்ரியா சுலே கவலைப்படுகிறார்கள். எந்தவொரு இந்து நடிகர் பற்றியும் இவர்கள் கவலைப்படுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?.
சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்ற இந்து நடிகர் சித்தரவை செய்யப்படும்போது, எதாவது சொல்வதற்கு யாரும் முன்வரவிலலை. சுப்ரியா சுலோ, அவாத் முன்வரவில்லை" என விமர்சனம் செய்தார்.