இந்தியா

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட தெலுங்கானா வாலிபர் குடும்பத்திற்கு இந்தியர்கள் ரூ.83 லட்சம் உதவி

Published On 2025-01-23 17:52 IST   |   Update On 2025-01-23 17:52:00 IST
  • ரவிதேஜா முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
  • இந்தியர்கள் 3000 பேர் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரமவுலி. இவருடைய மனைவி சுவர்ணா. தம்பதியின் மகன் ரவி தேஜா (வயது 26) மகள் ஸ்ரேயா.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சந்திரமவுலி தனது சொத்துக்களை விற்பனை செய்து மகன், மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு தனது வீடு உள்பட சொத்துக்களை விற்பனை செய்து ரவி தேஜா, மகள் ஸ்ரேயா ஆகியோரை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பினார்.

ரவி தேஜா முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார். பகுதி நேர வேலையாக அங்குள்ள ஒரு உணவகத்தில் உணவு சப்ளை செய்யும் வேலை செய்தார்.

கடந்த 19-ந் தேதி நியூ ஹேவன் என்ற இடத்தில் உணவு வாகனத்தில் ரவி தேஜா சென்று கொண்டிருந்தார்.

அப்போது நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூட்டில் அவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் சகோதரி ஸ்ரேயா GoFundMe.com என்ற ஆன்லைன் முகவரி மூலம் தனது குடும்பத்திற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதில் எனது சகோதரர் இறந்ததன் மூலம் எங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலில் தவிக்கிறோம். என்னுடைய தாய் குடும்பத் தலைவியாக உள்ளார். தந்தையால் தற்போது வேலைக்கு செல்ல முடியவில்லை.

எங்களை படிக்க வைப்பதற்காக எங்கள் வீடு உட்பட அனைத்தையும் விற்பனை செய்து விட்டோம். மேலும் என்னுடைய கல்விக்கடன், சகோதரர் இறுதிச்சடங்கு போன்ற செலவுக்காகக்காக நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது.

தயவுசெய்து அன்பு உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்யுங்கள் என உருக்கமாக அதில் பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 3000 பேர் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்தனர்.

அவர்கள் இதுவரை 97 ஆயிரம் டாலர் அதாவது ரூ. 83 லட்சத்து 88 ஆயிரத்து 560 வழங்கி உதவி செய்துள்ளனர். ரூ.1.29 கோடி வரை நிதி திரட்ட முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News