வேலையின்மையை ஒழிப்பதுதான் முதன்மையான குறிக்கோள் என்ற கெஜ்ரிவாலுக்கு பாஜக-வின் பதிலடி
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மையை ஒழிப்பதுதான் எங்களுடைய முதன்மையான முன்னுரிமை- கெஜ்ரிவால்.
- கடந்த 11 ஆண்டுகளாக ஏதும் செய்யவில்லை என்பதை கெஜ்ரிவால் ஒப்புக் கொண்டுள்ளார்.
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் மற்றும் பாஜக தேசிய தலைவர்கள் தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கெஜ்ரிவால் பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதேபோல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளும் இலவச அறிவிப்புகளை அள்ளி வீசியுள்ளன.
இந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலையின்மையை ஒழிப்பதுதான் எங்களுடைய முதன்மையான முன்னுரிமை என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இதற்கு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆட்சி அமைத்து 11 வருடங்களுக்குப் பிறகு வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் உணர்கிறார். கடந்த 11 ஆண்டுகளாக ஏதும் செய்யவில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 12 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், 7 வருடங்களில் 3,200 வேலை வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஷேசாத் பூனவல்லா தெரிவித்துள்ளார்.