இந்தியா

பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2024-05-19 21:41 IST   |   Update On 2024-05-19 21:41:00 IST
  • இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
  • இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

இந்த தொகுதியில் இளைஞர் ஒருவர் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 8 முறை வாக்களிக்கும் நபர் தான் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், தேர்தல் ஆணையமே இதை கொஞ்சம் பாருங்கள், இப்போதாவது கொஞ்சம் விழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.

இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். அதில், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டிதான் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த விவகாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News