- புத்தாடை உடுத்த நல்ல நேரம் அதிகாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வீட்டில் இருக்கும் அனைவரும் கங்கா நீராடல் செய்து விட வேண்டும்.
- தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷமாகும்.
வாழ்க்கையிலும், மனதிலும் இருக்கும் இருள், துன்பங்கள் நீங்கி, நன்மைகள் பெருகுவதற்கான நாளே தீபாவளி பண்டிகை. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் சிறப்பு அம்சங்களுள் ஒன்று கங்கா நீராடல். தீபாவளியை கங்கா நீராடலுடன் தான் துவங்க வேண்டும் என்பது மிக முக்கியமான விதிமுறையாகும். கங்கா ஸ்நானம் செய்வதற்கு நல்ல நேரம் மட்டுமல்ல, முறைகளும் உள்ளது. தீபாவளியன்று அனைவரும் கங்கையில் சென்று நீராட முடியாது. ஆனால் கங்கையில் குளித்த பலன் கிடைக்கப்பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் இருக்கும்.
தீபாவளியன்று அனைத்து நீர் நிலைகளிலும் கங்கா தேவி எழுந்தருள்வதாக ஐதீகம். இந்த நாளில் கங்கையில் நீராடினால் பாவங்கள், துன்பங்கள், வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதனால் தான் தீபாவளி நாளில் கங்கா நீராடல் மிக முக்கியமானதாக கூறப்படுகிறது.
புத்தாடை உடுத்த நல்ல நேரம் அதிகாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வீட்டில் இருக்கும் அனைவரும் கங்கா நீராடல் செய்து விட வேண்டும். குளித்து முடித்த பிறகு புத்தாடையில் மஞ்சள் தடவி புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டு முதலில் வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும். அதிகாலை நேரத்தை தவற விட்டவர்கள் காலை 9-10 மணி வரையான சுக்ர ஓரையில் புத்தாடை அணியலாம். அதன் பிறகு குல, இஷ்ட தெய்வத்தை வணங்கி வீட்டில் செய்த இனிப்பு பண்டங்களை சாப்பிடலாம். உறவினர்கள் நண்பர்களுடன் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கலாம். இயன்ற அளவு உணவு, உடை, இனிப்பு பொருட்களை தானம் வழங்கலாம்.
ஸ்ரீ லஷ்மி குபேர பூஜை மனிதன்
வாழ்க்கையை செம்மையாக நடத்த பொருள் மிகவும் அவசியம். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொருளை செல்வச் செழிப்பை அடைய முன்னோர்கள் கடைபிடித்த வழிபாடு தீபாவளித் திருநாளில் செய்யப்படும் லட்சுமி குபேர பூஜையாகும். பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன் இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் அவரை வழிபட்டவுடன் கோடீஸ்வரனாக்குவது குபேரனின் பணி. தீபாவளி மகாலட்சுமிக்கு உரிய நாளாக கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்வது விசேஷமானதாகும். தீபாவளி நாளில் தான் மகாலட்சுமியை வணங்கி, சகல செல்வ சம்பத்துக்களையும் குபேரர் பெற்றதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் லட்சுமி தேவியை வணங்குவதால், அவளின் பரிபூரண அருளை பெற முடியும். ஐப்பசி மாத அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகையும், லட்சுமி குபேர பூஜையும் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு 31.10.2024 வியாழக்கிழமை அன்று பகலில் சதுர்த்தசி திதியும் மாலை 3.55-க்கு மேல் அமாவாசை திதியும் வருகிறது. இந்த பூஜை மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலக்ஷமி தீபாவளித் திருநாளில் நமது இல்லம் தேடி வருவதாக ஐதீகம். எனவே தீபாவளியன்று மாலை 6 மணிக்குள் லக்ஷமி குபேர பூஜையை துவங்குவது நல்லது. சூரியனும் சந்திரனும் இணையும் அமாவாசைத் திதியில் துலா மாதத்தில் லட்சுமி குபேரனை வழிபாடு செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும். அன்று மாலை லஷ்மி குபேர பூஜை செய்பவர்கள் சகல ஐஸ்வர்யங்களையும் அடைய முடியும்.
பூஜை செய்யும் முறை
எந்த பூஜை செய்தாலும் முதலில் வீடு, வாசலை சுத்தம் செய்ய வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மஞ்சள் பிள்ளையார் மற்றும் குல, தெய்வத்தை மனதார வேண்டி பூஜையில் ஆவாஹனம் செய்வது மிக முக்கியம். அதன் பிறகு பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் வைத்து தலை வாழை இலை விரித்து, அதில் நவதானியங்களைப் பரப்பி புனித நீர் நிரம்பிய கலசத்தை அதன் மேல் வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நைவேத்தியப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைத்து மகாலட்சுமி மற்றும் குபேரனை பூஜையில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.
பிள்ளையாரின் மூல மந்திரம் மற்றும் அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்ட பிறகு, குல தெய்வத்தினை வழிபட வேண்டும். அதன் பிறகு மகாலட்சுமியின் அஷ்டோத்திரம், ஸ்ரீ சூக்தம் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். பூஜையில் குபேர லட்சுமியின் திருவருளால் அனைத்துச் செல்வங்களும் அதாவது தனம், தானியம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற வேண்டும் என சங்கல்பம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, குபேரனுக்கும் கலசத்திற்கும் உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை மஞ்சள் துணியில் முடிந்து பணப் பெட்டியில் அல்லது மணிப்பர்சில் வைப்பது சிறப்பு.
நாணய வழிபாடு
தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷமாகும். குபேர பகவானுக்கு உகந்த எண் ஐந்து என்பதால், 108 ஐந்து ரூபாய் நாணயங்களை சுத்தம் செய்து அதனைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமாகும். குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபாடு, அர்ச்சனை செய்யவேண்டும்.
தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை பெற்றுத் தரும். அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்ய வேண்டும்.
பொதுவாக வியாழக்கிழமை லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு.
அமாவாசை திதியும் வியாழக்கிழமையும் இணைந்த தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வது மிக மிக சிறப்பு. வாழ்வாதாரம் பெருக லட்சுமி குபேரருக்கு பச்சை குங்குமம் அர்ச்சனை செய்து வழிபட சுப மங்களம் உண்டாகும்.
பூஜை முடிவில் ஆரத்தி எடுக்கையில்,
ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே
நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே
ஸமேகாமான் காம காமாய மஹ்யம் !
காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது !
குபேராய வைஸ்ரவணாய மகாராஜாய நம:
என்ற மந்திரத்தைக் கூறி வழிபட பூஜை பலன் எளிதில் வசப்படும்.
கேதார கவுரி விரதம்
சிவ பெருமானுக்குரிய விரதங்களில் ஒன்றாக போற்றப்படுவது கேதார கவுரி விரதம். மனிதர்கள் மட்டுமின்றி கடவுள்கள் பலரும் இந்த விரதத்தை கடைபிடித்து வேண்டிய வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. பெரும்பாலும் கேதார கவுரி விரதம் தீபாவளியுடன் சேர்ந்து வருவதால் இந்த நாளில் லட்சுமி பூஜையுடன் சேர்த்தே கேதார கவுரி விரதத்தையும் கடைபிடிப்பதுண்டு. தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அதிகரிக்கவும், கணவன் மனைவி ஒற்றுமையை மேம்படுத்தவும், பெண்களுக்கு திருமணத் தடையை அகற்றவும் கேதார கவுரி விரதம் உதவுகிறது. ஒரு சிலர் புரட்டாசி மாத வளர்பிறை தசமி திதியில் தொடங்கி 21ம் நாளான ஐப்பசி அமாவாசை நாளில் நிறைவு செய்வார்கள்.
சிலர் தீபாவளி நாளில் மட்டும் விரதம் இருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். மாதம் முழுவதும் சூரியன் நீசமாக தனது வலிமை முழுவதையும் இழந்து இருப்பார். அமாவாசையன்று சூரியனுடன் சந்திரன் இணையும் காலம் சூரியனுக்கு வலிமை அதிகரிக்கும்.சூரியன் பிதுர்காரகன் - தந்தை. சந்திரன் மாதுர்காரகன் தாய். சூரியனின் அதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனின் அதி தேவதை கௌரி. நீசம் பெற்ற தந்தை சூரியனோடு தாயான சந்திரன் இணையும் நாள் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கருத்தை உணர்த்த பலம் இழந்த நீசம் பெற்ற நிலையில் இருக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது.
சிவசக்தி இணைவு நடைபெறும் அந்த அமாவாசை நாளில் சிவ சக்தியை நினைத்து கேதார கவுரி விரதத்தினை கடைபிடித்தால் கணவனின் ஆயுள், ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஐக்கியமும் பெருகும். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும். அதாவது கணவன் வலிமை குறைந்தவராக இருந்தால் கூட மனைவி துணை நிற்க கணவன் நிலை சீராகும். கணவனும் மனைவியை சம உரிமை தர வேண்டும் என்பதை உணர்த்துவதே கேதார கவுரி நோன்பு. இந்த விரதம் கடைபிடிக்கும் வழக்கம் எல்லா குடும்பத்திற்கும் கிடையாது. வழக்கம் இல்லாதவர்கள் பார்வதி பரமேஸ்வரரை மனதார வேண்டி இயன்றவரை அசைவ உணவை தவிர்த்து வழிபட்டால் தம்பதிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடு மறையும். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் ஏன் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.
பார்வதி பரமேஸ்வர வழிபாடு
பிரிந்து வாழும் பல தம்பதியினரை ஒன்று சேர்க்கும். மேலும் ஜனன கால ஜாதகத்தில் 8-ம் இட வலிமை குறைவால் திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள் 21 சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் குங்குமம் தந்து வணங்கி ஆசி பெற சிவ பார்வதி அருளால் விரைவில் திருமணத் தடை அகன்று விரைவில் திருமணம் நடைபெறும்.
இந்த தீபாவளித் திருநாள் அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும், இன்பமானதாகவும் அமையட்டும். ஸ்ரீ லட்சுமி குபேரர் அருளும், பார்வதி பரமேஸ்வரர் அருளும் நிரம்ப பெற்று வாழ நல்வாழ்த்துகள்.