
மோகன்லாலின் கை பக்குவம்... மீனா மலரும் நினைவுகள்
- முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்தோம்.
- நாங்கள் சொன்னதும் மோகன்லால் சார் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தார்.
துபாயில் திரிஷ்யம் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. நான், மோகன்லால் சார் எல்லோரும் சென்றிருந்தோம்.
அப்போது துபாயில் வசிக்கும் மோகன்லால் சாரின் நண்பர் ஒருவர் எங்களை சந்திக்க நேரில் வந்தார்.
அப்போது என் மகளுக்காக நிறைய பொம்மை மற்றும் பரிசு பொருட்களை வாங்கி வந்திருந்தார். அதை பார்த்ததும் 'ஏன், சார் இவ்வளவு பொருட்கள்....? என்று தயங்கினேன்.
அவர் சொன்னார் 'எங்கள் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டார்கள். எங்களுக்கு பொம்மை, விளையாட்டு பொருட்களெல்லாம் வாங்கி கொடுக்க சின்ன பிள்ளைகள் இல்லை. எங்கள் பேத்தி போல் உங்கள் பிள்ளைக்கு வாங்கினேன். உங்கள் மகளிடம் கொடுங்கள் என்று மிகுந்த அன்பு காட்டினார். எங்கள் எல்லோருக்கும் விருந்தும் கொடுத்தார்.
அப்போது இன்னொரு விஷயத்தையும் சொன்னார். தான், மோகன்லால் சாரை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த படத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றும் தனது எதிர்பார்ப்பையும் காதில் போட்டார்.
அதற்கான நாளும் விரைவிலேயே வந்தது. மோகன்லால் சார் ஜோடியாக நான் நடித்த 'முந்திரி வள்ளிக்கல் தளிக்கும் போல்' என்ற படத்தின் கதை தயாரானது. கதையை சொன்னார்கள். கதை எனக்கு பிடித்து இருந்தது.
தமிழில் 'திராட்சை கொடிகள் துளிர்க்கும் போது' என்பதுதான் இதன் அர்த்தம். உன்னச்சன் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லாலும் அவருக்கு ஜோடியாக ஆமி என்ற பாத்திரத்தில் நானும் நடித்தோம். அழுத்தமான கதை. பெற்றோரின் அன்பையும், பாசத்தையும் பார்த்துதான் குழந்தைகள் வளர வேண்டும் என்பதை உணர்த்துவதான கதை. கோழிக்கோடு பகுதியில் படப்பிடிப்பு. அங்கு மோகன்லால் சாரின் நண்பர் வீட்டில்தான் தங்கி இருந்தோம்.
மோகன்லால் சாருடன் அவருடைய மனைவியும் வந்திருந்தார். படப்பிடிப்பு ஜாலியாக போய்க் கொண்டிருந்தது. அதைவிட ஜாலி என்னவென்றால் மோகன்லால் சார் பிரமாதமாக சமைப்பார். அசைவ உணவில் விதவிதமாக சமைப்பார். ஒவ்வொன்றும் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
ஷூட்டிங் முடிந்ததும் சமையல் கட்டில் புகுந்து விடுவார். அவருடன் அவரது மனைவி, தயாரிப்பாளரின் மனைவி ஆகியோரும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமைத்து அசத்தினார்கள்.
ருசியான சாப்பாடு, ஜாலியான ஷூட்டிங். ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருந்தது. அப்போது மோகன்லால் சார் நடித்த ஒரு படமும் திரைக்கு வந்தது.
முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்தோம். நாங்கள் சொன்னதும் மோகன்லால் சார் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தார்.
ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து தப்பிக்கும் வகையில் தங்கியிருந்த வீட்டின் அருகில்தான் தியேட்டரும் இருந்தது. அங்கிருந்து தனி வழியாக தியேட்டருக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நாங்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த யூனிட்டும் அன்று முதல் ஷோவை பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றிருந்தோம். அந்த படமும் சூப்பராக இருந்தது. மோகன்லால் சாருக்கு எல்லோரும் பாராட்டு தெரிவித்தோம். கேரளத்தில் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி என்று நான் பார்த்த படமும் அதுதான்.
இந்த படத்தை தொடர்ந்து திரிஷ்யம்-2. அதுவும் மலையாளத்திலும், தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது. இரண்டு மொழிகளிலும் நான்தான் கதாநாயகி. இரு மொழிகளிலும் திரிஷ்யம்-1ஐ போலவே திரிஷ்யம்-2வும் வெற்றிப் படமாக அமைந்தது.
திருமணத்துக்கு பிறகும் பிசி நடிகையாகவே வலம் வந்தேன். அடுத்து என்ன என்கிறீர்களா? தவறாமல் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்...
(தொடரும்)