சிறப்புக் கட்டுரைகள்

எல்லோரிடமும் கற்றுக்கொள்ளலாம்!

Published On 2025-03-30 14:52 IST   |   Update On 2025-03-30 14:52:00 IST
  • வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு மனிதனும் கற்றல் அனுபவங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • ஒரு ஞானி, தான் ஞானத்தைச் சாலையில் பொதி சுமந்துசெல்லும் கழுதையிடம் இருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

வாழ்க்கையின் அனுபவங்களைப் பாடங்களாகக் கற்றுக் கொண்டிருக்கும் அன்பின் வாசகப் பெருமக்களே வணக்கம்!.

'கற்றல்' என்பது பள்ளி முதலான கல்விக்கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் பாடங்களைக் கற்பிக்க, அவற்றைக் கண்ணும் கருத்துமாய் மாணவராக இருந்து படிப்பது மட்டுமல்ல. கல்விக்கூடங்களில் கற்பது என்பது முறையாகப் படித்துத், தேர்வுகள் எழுதிப் பட்டங்கள் பெறுவது ஆகும்; இக்கற்றல் ஒரு குறிப்பிட்ட பருவநிலையோடு நின்றுபோய்விடும். படித்த படிப்பிற்கேற்ற பணி, பிறகு திருமணம், குடும்பம், பிள்ளை குட்டிகள் என்று ஆனபிறகு கற்றல் என்பது கேள்விக்குரியதாகவே ஆக்கப்படும். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் அன்றாடம் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும், அது துன்ப நிகழ்வாக இருந்தாலும், இன்ப மகிழ்வாக அமைந்தாலும் அவை ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள மனிதன் தயாராகும் போதுதான் அது அர்த்தமுள்ளதாக மாறி விடுகிறது.

வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு மனிதனும் கற்றல் அனுபவங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதனால்தான் கல்வியின் சிறப்பை எடுத்தியம்பும் வாக்கில் சாகும்வரை ஒவ்வொரு மனிதனும் கற்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

"யாதானும் நாடாமால் ஊராமால்

என்னொருவன்

சாந்துணையுங் கல்லாதவாறு".

கற்றல் மனோபாவம் ஒவ்வொரு மனிதனுக்கும் பணிவையும், அரிதின் முயலும் ஆர்வத்தையும் நல்குகிறது. இளம்பருவத்தில் கல்விக் கூடங்களில் கற்கும்போது, கற்பிக்கப்படுகிற பாடத்தின்மீது அக்கறையும், கற்பிக்கின்ற ஆசிரியர்மீது பயபக்தியும் தாமாகவே ஏற்பட்டுவிடுகின்றன. பள்ளிப் பருவம் முடித்து, குடும்ப வாழ்க்கைப் பயணம் தொடரும் போது, நமது உத்தியோகத்தால், அந்தஸ்தால், வயது மூப்பால், துன்பச் சூழல்களால் நம்மையும் அறியாத ஒரு உயர்வு மனப்பான்மை அல்லது ஆணவம் நம் எண்ணத்தில் தலைதூக்கி விடுகிறது. இதனால் தேவையற்ற மன உளைச்சல், வாழ்க்கையின் மீது ஆர்வமின்மை போன்ற எதிர்மறைப் போக்குகள் நம்மைப் பற்றிக் கொள்கின்றன.

வாழ்வின் எல்லா அனுபவங்களில் இருந்தும் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பும் ஆர்வம் நமக்குப் பணிவையும், புதுமை விரும்பும் போக்கையும் நல்கி, நம்மைப் புத்துணர்வோடு வைத்திருக்கிறது.

கல்விக் கூடங்களில் நமக்கு மேலான கல்வி கற்றவர்களிடமிருந்தே நாம் பாடம் படித்து வந்தோம். ஆனால், வாழ்வின் அனுபவத் தருணங்களில் நமக்கு மேலானவர், கீழானவர் என்கிற பேதமில்லாமல் எல்லோரிடமும், எல்லாவற்றைப் பற்றியும் கற்றுக் கொள்வதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

ஒரு ஞானி, தான் ஞானத்தைச் சாலையில் பொதி சுமந்துசெல்லும் கழுதையிடம் இருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். சுமையைத் தூக்கிவைத்தால் சுமப்பது!, யாராவது தொந்தரவு செய்தால் காலால் எட்டி உதைப்பது!, நேரங்கெட்ட நேரத்தில் கத்துவது! ஆகிய இவற்றைத் தவிர வேறு எதுவும் தெரியாத கழுதை எப்படி அந்தத் துறவிக்கு ஞானத்தைக் கற்றுத் தந்திருக்கும்?. துறவியிடம் கேட்டார் ஒருவர். அன்று காலை துவைப்பதற்காக முதுகில் அழுக்குத் துணி மூட்டையோடு ஆற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தது கழுதை. " பார்! பார்! நன்றாகப் பார்த்துக்கொள்!" என்றார் ஞானி. கேள்வி கேட்டவரை, மாலையும் வந்து என்னோடு இருந்து கழுதை ஆற்றில் இருந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்வதையும் பார்த்துச் செல்லவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

மாலை வந்தது; கழுதை, வெளுத்த துணிமூட்டையோடு திரும்பிக் கொண்டிருந்தது. துறவி அந்த நண்பரிடம் கேட்டார், "காலையில் நீ பார்த்த கழுதைக் காட்சிக்கும், இப்போது நீ பார்க்கும் கழுதைக் காட்சிக்கும் ஏதேனும் மாறுதல் உணருகிறாயா?".


முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

தொடர்புக்கு 9443190098 

" இல்லை! காலை ஆற்றுக்குப் போகும்போது எப்படிச் சென்றதோ அதே போலத்தான் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறது" என்றார் நண்பர். "இந்த ஞானத்தைத் தான் நான் கழுதையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். காலையில் அழுக்குத் துணிகளைச் சுமக்கிறோமே! என்று கழுதை வருந்தவுமில்லை; மாலையில் வெளுத்த துணிகளைச் சுமந்து செல்கிறோமே! என மகிழவுமில்லை!; இதுதான் ஞானம்!. துன்பத்தில் வருந்துவது; இன்பத்தில் மகிழ்வது ஆகிய இரண்டையும் ஒழித்துவிட்டு, இன்பம், துன்பம் இரண்டையும் ஒன்றுபோலவே பார்க்கிற சமநிலை ஞானத்தை நான் கழுதையிடமிருந்து கற்றுக்கொண்டேன்!" என்றார் ஞானி.

இயற்கையின் அனுசரணையில்தான் மனித வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. மனிதன் ஒவ்வொரு நொடியும் கற்றுக் கொள்வதற்கான அனுபவங்களோடு இயற்கையும் சக உயிர்களும் காத்திருக்கின்றன. நாம்தாம் கற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். இவர் யார் கற்றுத் தர? நாம் ஏன் கற்றுக் கொள்ளவேண்டும்? என்று உதாசீன உணர்வோடு இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற இன்பங்களைக்கூட நிம்மதியாக அனுபவிக்க முடியாது. இந்த உலகிலேயே அதிசிறந்த அறிவையும், ஆற்றலையும் உடையவராக நாம் இருக்கிறோம்! என்பது ஒருவகையில் உண்மையாகக்கூட இருக்கலாம்; ஆனால் ஒரு குருவி கட்டும் கூட்டை அதே நுட்பத்துடன் உருவாக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா? குருவிடமிருந்து கற்றுக்கொள்வது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்த பட்சம் குருவியிடமிருந்து கற்றுக் கொள்வதையாவது கற்றுக்கொள்வோம்.

மலையிடமிருந்து மன உறுதியையும், மண்ணாகிய பூமித் தாயிடமிருந்து பொறுமையையும், மென்மையை அனிச்சப்பூவிடம் இருந்தும் கற்றுக்கொள்ள நாம் சம்மதித்து விட்டால், தினையளவு உதவியையும் பனையளவாக மதிக்கும் செய்ந்நன்றியறியும் குணமும், மனத்துக்கண் மாசிலனாகும் மனமும், நல்லோரோடு இணக்கமாக வாழ்ந்து நட்பு பாராட்டும் நலமும், உலகத்தோடு ஒட்ட ஒழுகும் வாழ்நிலை அறமும் நமக்குத் தாமாகவே அமைந்து விடும் என்கிறார் வள்ளுவர்.

அலுவலகமாயினும், தொழில்கூடமாயினும் நமக்கு மேலுள்ளவர்கள் சொற்படி கேட்டுக், கற்றுக்கொண்டு நடக்க வேண்டியது விதியாகவே கருதப்படும். ஆனால் நமது சக பணியாளரிடமோ அல்லது நமக்குக் கீழே பணியாற்றக் கூடியவரிடமிருந்தோ கற்றுக் கொள்ளும் சூழ்நிலை வாய்த்தால் அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். என்னுடைய தகுதி, தன்முனைப்பு இடம்கொடுக்க மறுக்கிறதே என்று விலகி நிற்க நேரிட்டால், உண்மையில் தோற்றுப்போக வேண்டிய சூழல் நமக்கு ஏற்பட்டுவிடும். இங்கே எல்லோரிடமும் கற்றுக் கொள்ளலாம் என்கிற தாராள மனப்பான்மை உருவானால் எல்லோரோடும் பேதமில்லாத சமத்தன்மை உருவாகிவிடும். எதிரிகளும் நண்பர்களாகிப் போகும் இன்பநிலை உண்டாகும்.

எல்லா விஷயங்களிலும் எல்லோரும் திறமையானவர்களாக இருக்க முடியாது. வீட்டையே எடுத்துக்கொள்வோம்; அம்மா சாம்பார் வைப்பதில் கெட்டிக்காரர் என்றால், புளிக்குழம்பு வைப்பதில் மனைவி புலியாக இருக்கலாம்; சாம்பார், புளிக்குழம்பு விஷயங்களில் மாமியாரும், மருமகளும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போய்க் கற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டால், வீட்டுச் சமையலறையே சொர்க்கமாக மாறிவிடும் அல்லவா? அலுவலகங்களிலும் அப்படித்தான். கற்றுக் கொள்வ தில் வேலை நிரவல்கள் ஏற்பட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுதான் பரிசாய் அமையும்?.

பல கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், மாணவர்களி டமிருந்து கற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்கள். உண்மைதான் அறிவுத் தேடுதல் உடைய ஒவ்வொரு மாணவனின் ஆழமான ஒவ்வொரு கேள்வி யுமே ஆசிரியரின் புதிய கற்றலுக்கான வாசல்களைத் திறந்து வைக்கின்றன.

ஆசிரியர் கற்கக் கற்க அவரும் மாணவர் ஆகிறார்; ஆசிரியரும், மாணவரும் அறிவுப் பங்காளிகள் ஆகிப்போகின்றனர். சில இடங்களில் புதிதாக வேலைக்கு வருவோரிடம் புதிய அறிவு வெளிச்சங்கள் நிரம்பிக் கிடக்கலாம்; மூத்தவர்கள், இளையோரிடமும் கற்றுக்கொள்ளச் சம்மதிக்கும்போது அந்த அலுவலகமே நட்புக் கூடமாக நளினம் அடைந்துவிடும்.

ஒரே வானம், ஒரே சூரியன், ஒரே நிலா, அதே மேகங்கள், அதே காற்று, அதே மழை, அதே மரம், செடி கொடிகள், அதே அருவி, அதே நதி, அதே பறவை, அதே மலை... என்று இயற்கை எப்போதும் ஒன்றுபோலவே இருந்தாலும் அவை எப்போதும் ஒன்றுபோலவே இருப்பதில்லை. நம்முடைய வருத்தம் மற்றும் இன்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் மனத்தை இலகுவாக்கிக்கொண்டு இயற்கையோடு ஈடுபடத் தொடங்கினால், அவற்றில் இருந்து கற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டால், நாமும் இயற்கையும் ஒன்றாகிவிடுவோம்!; புத்துணர்வில் நமது உள்ளத்திலும் பூப்பூக்கத் தொடங்கிவிடும்.

ஒரு குருவிடம் அவரது சீடர்கள், "உங்களது குரு யார்?" என்று கேட்டார்கள். "நான் எத்தனையோ பேரிடமிருந்து எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அவர்களில் மூன்று பேரை நான் குருவாக மதிக்கிறேன்" என்றார் குரு. அவரே சொன்னார்:

என்னுடைய முதல் குரு ஒரு திருடன்: ஒரு கிராமத்தில் இரவு நேரத்தில் ஒரு வீட்டுக்குள் திருடப் புகுவதற்காக சுவற்றில் ஓட்டை போட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் 'இங்கு இரவு தங்குவதற்கு இடம் கிடைக்குமா?' என்று கேட்டேன். 'திருடனோடு தங்கச் சம்மதமா?' என்று கேட்டுவிட்டு, நான் 'சரி'யென்றதும் அவனோடு தங்க அனுமதித்தான். ஒருமாதம் தங்கியிருந்தேன்; இரவு முழுவதும் திருடப்போவான்; நான் ஓய்வெடுப்பேன். அதிகாலை வருவான்; 'ஏதாவது கிடைத்ததா?' என்று கேட்பேன். 'இன்று கிடைக்கவில்லை! நாளை நிச்சயம் கிடைக்கும்!' என்று நம்பிக்கையோடு சொல்வான். நாள்தோறும் கேட்கும் இந்த நம்பிக்கை வார்த்தைதான், என்னைத் தொடர்ந்து நம்பிக்கையோடு பிரார்த்தனை பண்ணக் கற்றுத்தந்தது.

இரண்டாவது குரு ஒரு நாய்: ஒருநாள் நண்பகல் வேளை. கடுமையான தண்ணீர் தாகம். தண்ணீர் பருகுவதற்காக ஆற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்; என்னோடு ஒரு நாயும் வந்தது; அதற்கும் நாவறட்சி; தண்ணீர் தேவைப்பட்டது. ஆற்றைப் பார்த்ததும் இறங்கி தாகம் தணியத் தண்ணீர் பருகினேன்; திரும்பி நாயைப் பார்த்தேன். அது அச்சத்தோடு ஆற்றை நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. நாயைப் பிடித்துத் தூக்கி ஆற்றுக்குள் போட்டேன்; ஆசைதீர தண்ணீர் பருகத் தொடங்கிவிட்டது. தண்ணீரைவிட்டு லேசில் வெளியே வரவும் மறுத்துவிட்டது. மனித மனமும் இப்படித்தான்; சிலவற்றில் ஈடுபடுவதற்கு அஞ்சி அஞ்சிச் செத்துக்கொண்டே இருக்கிறது. துணிச்சலுடன் தூக்கிப்போட்டுவிட்டால் சாதனைமேல் சாதனை புரியத் தொடங்கி விடுகிறது.

மூன்றாவது குரு ஒரு குழந்தை: அது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றியது; ஒளி எங்கிருந்து வந்தது? என்று கேட்டேன். விளக்கை ஊதியணைத்த குழந்தை இப்போது ஒளி எங்கு போனதோ அங்கிருந்து வந்தது! என்று சொல்லிச் சிரித்தது. அன்றோடு என் ஆணவம் சரிந்து தரைமட்டமாகிப் போய்விட்டது என்றார் ஞானி.

கற்றல் நம்மை நாமாக உணர வைக்கிறது; நம்மில் அனைவரும் எனும் உலகத்துவத்தை உன்னதப்படுத்துகிறது.

Tags:    

Similar News