சிறப்புக் கட்டுரைகள்
சுய ஜாதகமும் சனி பகவானும்
null

சுய ஜாதகமும் சனி பகவானும்

Published On 2025-03-22 23:45 IST   |   Update On 2025-03-22 23:45:00 IST
  • ஜென்ம லக்னத்தில் சனி இருப்பவர்கள் பிறரின் உதவியை எதிர்பார்க்க கூடாது.
  • முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படுத்தினால் விதிப் பயன் நீங்கும்.

சனி பகவான் என்ற பெயரை கேட்டாலே தொட்டிலில் தூங்கும் குழந்தை முதல் வாழ்நாளை எண்ணும் முதியவர் வரை பயம் தான். இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி 29.3.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சனி பகவான் ஒருவரின் சுய ஜாதகத்தில் எப்படி பலன் தருவார் ஒருவரின் ஜனன ஜாதகத்தில் சனி பகவான் தான் நின்ற பாவகத்தின் மூலம் பூர்வ புண்ணிய பலப்படி சுப,அசுப பலன்கள் நடத்தி ஜாதகருக்கு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைப்பார். சனி பகவான் எளிமைக்கும் அடக்கத்திற்கும் அதிபதி. சுய ஜாதகத்தில் சனி பகவான் நின்ற காரக பாவக பலன்களை அதீத எதிர்பார்ப்பு இன்றி நன்றியுணர்வுடன் அமைதியாகவும், எளிமையாகவும், பயன்படுத்தினால் அந்த பாவகத்தால் நற்பலன்களை அனுபவிக்க செய்வார்.

சனி நின்ற பாவக பலனை ஆர்பாட்டத்துடன் பயன்படுத்தி பெருமை பாராட்டி அதன் மூலம் அடுத்தவரின் பொறாமையையும், ஏக்கத்தையும் தூண்டினால் அந்த பாவக பலனை பறித்து வினையை மிகுதிப்படுத்துவார். அதாவது ஒரு ஜாதகத்தில் சனி நின்ற பாவக பலனை (உயிர், பொருள்) எளிமையாகவும், ரகசியமாகவும், அமைதியாகவும், நன்றியுடனும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எந்த அளவிற்கு அமைதியாக பயன்படுத்துகிறாரோ அந்த அளவிற்கு நன்மை தருவார், துன்பமற்ற வாழ்வு தருவார்.

வாழ்நாள் முழுவதும் நல்ல பலனை அனுபவிக்க முடியும். ஒருவர் வாழ்வதற்கும் வீழ்வதற்கும் சனி பகவானே காரணம். இதை நாம் அனுபவத்தில் உணர்ந்தும் இருப்போம். பரம்பரை பணக்காரர்கள் பலர் எளிமையான ஆடை மற்றும் உத்திராட்சம் அணிந்து சிவ பக்தியுடன் தான தர்மம் செய்து நன்றியுணர்வுடன் வாழ்க்கையை அனுபவிப்பதை பார்த்து இருக்கிறோம். அதே சமயத்தில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான புதிய பணக்காரர்கள் பலர் ஆடம்பரமான, பகட்டான உடை உடுத்தி லவுகீகத்தில் உள்ள அனைத்து தவறான செயலுக்கும் அடிமையாகி குறுகிய காலத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போவதையும் பார்த்து இருக்கிறோம்.

இந்த கட்டுரையில் சுய ஜாதகத்தில் சனி நின்ற பாவக பலனை, எவ்வாறு எளிமையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறலாம் என்று காணலாம். கீழே கூறப்பட்ட அனைத்து பலன்களும் லக்னத்தின் அடிப்படையில் பலன் தரும்.

லக்னத்தில் சனி

ஜென்ம லக்னத்தில் சனி இருப்பவர்கள் பிறரின் உதவியை எதிர்பார்க்க கூடாது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தனக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி பிறரின் மனதை நோகடிக்க கூடாது. தான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை அகற்ற வேண்டும். அழகு, ஆடம்பரத்தை விரும்பக் கூடாது.

ஆணவம், பகட்டு இல்லாமல் எளிமையாக வாழ்ந்தால் சமூதாயத்தில் உயர்ந்த பதவி, பட்டங்களும் பதக்கங்களும் பாராட்டும் கிடைக்கச் செய்வார். உற்றார் உறவினர்களின் உறவு வாழ்நாள் முழுவதும் தித்திக்கும்.

இரண்டில் சனி

நீதி, நியாயம் பற்றிய சிந்தனை இல்லாமல் தகாத வார்த்தைகள் பேசி குடும்ப உறுப்பினர்கள் மனதை நோகடிக்க கூடாது. பொய்களை உண்மை போல் பேசக்கூடாது.

தேவையில்லாமல் சத்தியம் செய்யக் கூடாது. தனது பொருளாதாரத்தை அடுத்தவர் கண்டு ஏங்கும் அளவிற்கு ஆடம்பரமாக நடந்து வினைப் பதிவை மிகுதியாக்ககூடாது. குடும்ப உறுப்பினர்களிடம் பொய் பேசாமல் அன்பான வார்த்தைகளை பேசி தான தர்மத்தில் ஈடுபட குடும்ப வாழ்க்கை ருசிக்கும்.

மூன்றில் சனி

மூன்றாம் இடத்தில் சனி இருப்பவர்கள் இளைய சகோதரத்தின் மந்த தன்மையை, இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது. தனது இளைய சகோதர, சகோதரிகளுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்ய வேண்டும். தனது வீரதீரச் செயல்களையும் தனது சுய முயற்சியால் அடைந்த வெற்றியையும் எளிமையாக, அமைதியாக பயன்படுத்தினால் தொடர் வெற்றியால் உயர்வு உண்டு.

நான்கில் சனி

பொதுவாக நான்கில் சனி இருப்பவர்களுக்கு வீடு, பூமி சொத்து போன்றவற்றில் பற்று அதிகம் இருக்கும். தனது தாயை வசப்படுத்தி குடும்ப சொத்தை தான் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்க கூடாது. உடன் பிறந்தவர்களுடன் சொத்தை பாரபட்சமின்றி பிரித்து பயன்படுத்த வேண்டும். தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். தனது வீடு வாகனம், நிலம், தோப்பு மற்றும் சொத்து சுகங்களை ரகசியமாக தன் மீது பத்திர பதிவு செய்யக் கூடாது.

தனது சொத்துக்களை மனைவி அல்லது குழந்தைகளின் மேல் பதிவு செய்ய வேண்டும். பழைய வீடு, வாகனத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும். புதிய சொத்து சுகத்தால் பயனற்ற நிலை உண்டாகும். செய்ய வேண்டிய கடமைகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆத்மார்த்தமாக செய்பவர்களுக்கு நான்காம் இட சனியால் ஏற்படும் கர்ம வினை குறைந்து சுப பலன் கிட்டும். கறவை நின்ற கால்நடைகளை விற்கக் கூடாது. தேவைக்கு நண்பர்களை பயன்படுத்தி காரியம் முடிந்தவுடன் கழட்டி விடக்கூடாது.

ஐ.ஆனந்தி

 ஐந்தில் சனி

லக்னத்திற்கு ஐந்தில் சனி இருப்பவர்கள் பூர்வீக சொத்தை தன் மீது பத்திரப் பதிவு செய்யக்கூடாது. உடன் பிறந்தவர்களுக்கு அல்லது குல தெய்வ கோயிலுக்கு தானமாக கொடுப்பது நல்லது. தானம் தர விருப்பம் இல்லாதவர்கள் தனது பிள்ளைகள் அல்லது பேரக் குழந்தைகள் மீது மாற்றம் செய்து பயன்படுத்தினால் சிறப்பான பலன் கிடைக்கும். அதே போல் பிள்ளைகள் மீதும் கவுரவப் பதவிகள் மீதும் பற்றைக் குறைக்க வேண்டும். பூர்வீகத்தில் வசிக்காமல் வெளியூர், வெளிநாட்டில் வசித்தால் வாழ்க்கை வளமாகும். தனது குழந்தைகளை ரசிக்க கூடாது அல்லது பிள்ளைகளின் மீது அளவு கடந்த அன்பு வைக்கக் கூடாது.

ஆறில் சனி

லக்னத்திற்கு ஆறில் சனி இருப்பவர்களுக்கு பரம்பரை வியாதிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை குறையும். வாயுத்தொல்லை, வாதம், எலும்பு நரம்பு சம்பந்தமான தீராத, தீர்க்க முடியாத நோய், பெயர் தெரியாத இனம் புரியாத நோய், முன்னோர்களின் பரம்பரை நோய் போன்ற மன உளைச்சல் இருக்கும்.

இவர்களுக்கு தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும். வறுமை கடனால் கவலை வழக்கு, சிக்கல். சண்டை, சச்சரவு எதிரி தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இவர்களை நம்பிக்கையான வேலையாட்களே ஏமாற்றுவார்கள். தாய்மாமாவால், உத்தியோகத்தால் மதிப்பு மரியாதை குறையும்.

ஏழில் சனி

லக்னத்திற்கு ஏழில் சனி இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணை மேல் அதீத எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஆணாக இருந்தால் தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என நூறு மணல் கயிறு கண்டிஷன் போடுவார். பெண்ணாக இருந்தால் வரப் போகும் வாழ்க்கைத் துணைக்கு இன்டர்வியூ வைப்பார். வாழ்நாளில் பாதியை கடந்த பிறகு விதி மேல் பழி போட்டு கிடைத்த வாழ்க்கையை மனக்குறையுடன் வாழ்வார்கள் அல்லது தனது குலத்திற்கு விரோதமான திருமண வாழ்க்கையை ஏற்படுத்தி கர்ம வினையை அனுபவிப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள், கூட்டுத் தொழிலால் பிரச்சனை இருக்கும். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி கிடைத்த மண வாழ்க்கையை பெற்றோர்களின் நல்லாசியுடன் நடத்தும் போது நன்மைகள் நடக்கும்.

எட்டில் சனி

லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் இருப்பவர்களுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுள். வறட்டு கவுரவம் மற்றும் பிடிவாதத்தால் உறவினர்களிடம் இருந்து விலகி இருப்பார்கள். சொந்தங்களின் ஆதரவு இருக்காது. தீய பழக்க வழக்கத்தால். வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொள்ள வேண்டிய நோய் அல்லது எளிதில் குணமாகாத நோய் இருக்கும். கர்ம வினையின் தாக்க நோய் மிகுதியாக இருக்கும். முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படுத்தினால் விதிப் பயன் நீங்கும்.

ஒன்பதில் சனி

லக்னத்திற்கு ஒன்பதில் சனி பகவான் இருப்பவர்கள் நிறைந்த கல்வி சமுதாய ஒழுக்கம், நிர்வாகத்திறன் பிறரை அனுசரித்து செல்லுதல் போன்ற உயர்ந்த பண்புகள் நிறைந்து இருந்தாலும்.

பொன் பொருளை பிறருக்கு கொடுத்து வாழ்க்கையை இழந்து கர்மவினையை அனுபவிப்பாகள். இல்லற துறவி. ஆசை, பாசம் போன்ற உணர்வு குறைவால் இனத்தாரை வெறுத்து ஒதுக்கி கர்ம வினையை அதிகரிப்பார்கள்.

பத்தில் சனி

லக்னத்திற்கு பத்தில் சனி இருப்பவர்கள் முன்னோர்களின் பரம்பரை தொழில் ஆர்வம் மிகுந்தவர்கள். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் நல்லாசி உண்டு. கடின உழைப்பு, சிக்கன் நடவடிக்கை , தவறாத நீதிநெறி, தன்மானம் காத்தல் போன்ற நற்குணங்களால் தன் வாரிசுகளுக்கு புண்ணிய பலன்களை மிகுதிப்படுத்துவார்கள்.

பதினொன்றில் சனி

அரச பதவி, அரச வெகுமதி, வீடு வாகன யோகம், குலத்தொழில், உயர்ந்த அந்தஸ்து, தீர்க்க ஆயுள், சலிக்காத உழைப்பு, தைரியம் போன்றவற்றால் முழுமையான நன்மைகள் நீடிக்கும். மூத்த சகோதரம், பங்காளிகள் பூர்வீக சொத்து பிரச்சனையால் சர்ச்சைகள் உண்டு. முறையான சொத்துப் பங்கீடு மூத்த சகோதரத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதன் நிம்மதியை அதிகரிக்க முடியும்.

பன்னிரெண்டில் சனி

பன்னிரெண்டில் சனி இருப்பவர்கள் குறைந்த செயல்திறன், தயக்கம், சோம்பல், தன்னம்பிக்கை குறைவு, மறதி, பணப்பற்றாக்குறை போன்றவற்றால் அதிக நட்டங்களையும், இழப்புகளையும் சந்திப்பார்கள். சிறைதண்டனை அல்லது வெளிநாட்டு வாழ்க்கையால் குடும்ப உறவு பிரிந்து வாழ்வார்கள்.

முகம் தெரியாத மூன்றாம் நபர்கள். முன்பின் அறியாதவர்கள். அண்டை வீட்டுக்காரர்கள் என ஏதாவது ரூபத்தில் மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரமாகும்.

பரிகாரம்

பொதுவாக சனி நின்ற பாவகத்தின் மூலம் கர்ம வினையே மிகுதியாக இருக்கும். மிகுதியான கர்ம வினை தாக்கத்தை குறைக்க ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரவும் உணவில் நல்லெண்ணைய் அதிகம் சேர்க்க வேண்டும்.

சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

கறுப்பு உளுந்து தானம் தர வேண்டும்.

செல்: 98652 20406

Tags:    

Similar News