- ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் உச்சம் பெறக்கூடிய நாள் ஆடிப்பூரம் விழாவாக கொண்டாடப்படுகிறது.
- ஆண்டாளோ பெரியாழ்வார் தொடுக்கும் மாலைகளை தான் முதலில் அணிந்து பார்த்த பின்னரே பெருமாளுக்கு அளித்தார்.
ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் உச்சம் பெறக்கூடிய நாள் ஆடிப்பூரம் விழாவாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக திருவிழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதில் வைணவத்தலங்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது. ஆம் ஆண்டாள் அவதரித்த இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். ஆண்டாள் மனிதர்களைப் போல வயிற்றில் பிறக்கவில்லை. அவர் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்த பெரியாழ்வாருக்கு துளசி செடிக்கு அடியில் ஆண்டாள் சிசுவாக கிடைத்தாள்.
அவளை அன்போடும், பண்போடும் வளர்த்து வந்தார் பெரியாழ்வார். அவர் விடியற்காலையில் பூக்களைப் பறித்து மாலைகளைத் தொடுத்து பெருமாளுக்கு அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால் ஆண்டாளோ பெரியாழ்வார் தொடுக்கும் மாலைகளை தான் முதலில் அணிந்து பார்த்த பின்னரே பெருமாளுக்கு அளித்தார். இதை ஒரு நாள் கண்டுவிட்ட பெரியாழ்வார் ஆண்டாள் மீது கடிந்து கொண்டார். இறைவனிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார்.
அன்று இரவு இறைவன் பெரியாழ்வாரின் கனவில் வந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே தனக்கு வேண்டும் என்றார். உடனே கனவிலிருந்து விழித்த பெரியாழ்வார், ஆண்டாள் சாதாரண குழந்தை அல்ல. அவள் தெய்வக்குழந்தை என புரிந்து கொண்டார். பின்னர் ஆண்டாள் மண வயதை அடைந்ததும், எம்பெருமானின் கட்டளைப்படி ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல. அங்கு ஸ்ரீ ரங்கநாதரிடம் ஒளியாய் சேர்ந்து கொண்டாள்.
ஆடிப்பூரம் திருவிழா:
ஆடி மாதத்தில் சிவனை விட அம்மன் அதிகமாக கொண்டாடப்படுகிறது. பூமியில் அவதரித்த அம்மன் ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது, அதை குறிப்பதாக ஆடிப்பூரம் 10 நாட்கள், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை.
ஆடிப்பூரத்தன்று தான் சித்தர்களும், யோகிகளும் தங்களுடைய தவத்தை தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன.
திருமண யோகம் தரும் ஆடிப்பூர விரதம்:
ஆடிப்பூரத்தன்று திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் "ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு வளையல்களை வாங்கித் தந்து வழிபட்டு அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்களங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக்கோலம் கொண்ட நாள் என்பதால் குழைந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும்.
ஒவ்வொரு பெண்ணின் வடிவிலும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால் எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை என்று அவரவரால் இயன்ற மங்களப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் இல்லறம் சிறக்கச் செய்யும். இன்பங்கள் நிறையச் செய்யும் என்பது ஐதீகம்.
தாலிபாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக நீங்கள் வேறு எதுவும், செய்ய வேண்டாம். ஆடிப்பூர நாளில் அம்மனுக்குக் கொஞ்சம் வளையல் வாங்கிக் கொடுங்கள். பதிலுக்கு உங்கள் வாழ்க்கை வளமையாகும் வரத்தை நிச்சயம் தருவாள் அம்பிகை.
திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் 4 ஆம் நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த அம்பிகையை வழிபடுவோர் திருமணம், பிள்ளைப்பேறு பெறுகின்றனர். சிலர் வீட்டில் முளைப்பாலிகை வைத்து அதை கோவிலில் சேர்க்கின்றனர். ஆடிப்பூர விழா, பல்வேறு ஆலயங்களில் வாகன சேவையுடன் 10 நாள் திருவிழாவாகவும் நடைபெறும்.
திருவாரூர் கமலாம்பாள், நாகை நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை போன்ற பல திருத்தலங்களில் 10 நாள் பிரம்மோற்சவமும் திருமயிலைக் கற்பகவல்லிக்கு ஆடிப் பூரத்தன்று மதியம் சந்தன காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் நடைபெறுகிறது. மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் திருக்கோவில், அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். அம்பாள் மூர்த்தம் அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான வாசனை பொருள்களால் ஆக்கபட்டது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.
ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி ஆகிய 3 நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாள்களில் அம்மனுக்கு திருபாதத்தில் மட்டுமே பூஜை நடக்கின்றது. அகில உலகத்தை காக்கும் நாயகியாம் திரிபுரசுந்தரியை வருடத்தில் 3 முறை நடைபெறும் மகாஅபிஷேக விழாவில் கண்டு வணங்கினால் பாவம் விலகி நல்லவை நடக்கும்.
ஆடிமாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. ஆடிப்பூரம் அன்று சக்தி தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.
அம்மன் கோயிலில் கண்ணாடி வளையல்கள் வாங்கி, அந்த வளையலை அம்மனுக்கு சாற்றி விட்டு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு அதை கொடுப்பார்கள்.
அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு, வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். அதற்காக ஆடிப்பூரம் அன்றைக்கு அம்மனுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
கோவிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதே போல் திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும். ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம்.
திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் தன் துணையாக அமைய வேண்டும் என்றும் தீர்க்க சுமங்கலியாக வாழ இறைவனிடம் அருளும்படி வேண்டி அந்த வரத்தை ஆதிசக்தி அருளுவதாக கூறப்படுகிறது.
இந்த அற்புத திருநாளில் எழை, எளிய சுமங்கலிப் பெண்களுக்கு புடவை. குங்குமம்,மஞ்சள், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பதும் உண்டு. பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வர்.
இந்த ஆண்டு ஆடிப்பூர விழா வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
அம்மன் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ள பெண்கள் தங்களின் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு பட்டு வஸ்திரம், வளையல் பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.
அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல். கூல், ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.