சிறப்புக் கட்டுரைகள்

அடியாருக்கு பார்வை கொடுத்த அம்பிகை

Published On 2023-02-10 17:49 IST   |   Update On 2023-02-10 17:49:00 IST
  • மதுரை கோவிலின் புது மண்டபமும், வண்டியூர் தெப்பக்குளமும் அமைக்கப்பட்டன.
  • திருமலை நாயக்க மன்னர் மற்றும் அவருடைய திருவாட்டியான அரசியின் சிலா ரூபங்களும் செதுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

16-17-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர் நீலகண்ட தீட்சிதர் என்னும் மகான். மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் அமைச்சராகவும் ஆலோசகராகவும் திகழ்ந்தவர். மதுரை மீனாட்சியம்மையின் பக்தராக விளங்கிய இவருடைய வாழ்வில், வேதனை தரக்கூடிய சம்பவங்கள் சில நிகழ்ந்தன.

இவருடைய மேற்பார்வையில்தான், மதுரை கோவிலின் புது மண்டபமும், வண்டியூர் தெப்பக்குளமும் அமைக்கப்பட்டன. பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், இவருடைய வாழ்க்கையை திசை திருப்பிய சம்பவமும் நடந்தது.

கோவில் சிற்பவேலைகளையும் திருப்பணியையும் நீலகண்டர் மேற்பார்வை இட்டுக்கொண்டிருந்தார். திருமலை நாயக்க மன்னர் மற்றும் அவருடைய திருவாட்டியான அரசியின் சிலா ரூபங்களும் செதுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சிற்ப அமைப்பைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த நீலகண்டர், கால தாமதம் ஆவது குறித்துச் சிற்பியிடம் கடிந்து கொண்டார்.

வருத்தப்பட்ட சிற்பி, வேறு யாருக்கும் சொல்லாத விஷயம் ஒன்றை நீலகண்டரிடம் பகிர்ந்தார். அரசரின் உருவத்தைச் செதுக்குவதில் சிக்கலில்லை. ஆனால், அரசியாரின் உருவத்தைச் செதுக்குவதில் சிக்கல். எத்தனையோ முறை செதுக்கியாகிவிட்டது; மூலக்கல்லைக் கூட மாற்றியாகிவிட்டது. ஆனாலும், பிரச்சினை தீரவில்லை.

அரசியாரின் தொடைப் பகுதியில், கல் உடைந்து உடைந்து போகிறது. சற்றே பள்ளமாகிவிடுகிறது. எத்தனை முறை செய்தாலும், இப்படி ஆகிவிடுகிறது. என்ன பரிகாரம் தெரியவில்லை.

சிற்பி இதனைச் சொன்னவுடன், கண் மூடி சிந்தித்தார் நீலகண்டர். கண்களைத் திறந்துவிட்டுக் கூறினார்: 'கவலைப்படாதேயும். அரசிக்கு அங்கொரு மருவுள்ளது. அதுதான் கல் தெறிக்கிறது. அப்படியே சிலையைச் செய்துவிடும்.'

சிற்பியும் அப்படியே செய்துகொண்டிருக்க.. இரண்டொரு நாட்களில், பார்வையிடுவதற்காக வந்த அரசரின் கண்களில், அரசியின் உருவச் சிலையில் மாற்றம் தென்பட்டது. என்ன இது? என்று அரசர் முகம் சுழிக்க, முதன்மை அமைச்சரே ஒப்புதல் கொடுத்த விஷயத்தைச் சிற்பி தெரிவித்தார்.

அமைச்சருக்கு அரசியின் உடலில் உள்ள மரு தெரியுமா? அரசருக்கு ஆத்திரம் பொங்கியது. அரசியைக் கிஞ்சித்தும் குறை எண்ணாத அரசர், அமைச்சரின் செயல்பாடுகளில் ஐயம் கொண்டார். அரசி நீராடும்போது கள்ளத்தனமாகக் கண்டிருப்பாரோ? தவறு செய்த கண்களுக்குத் தண்டனை தருவதென்றும் தீர்மானித்தார்.

அடுத்த நாள். வழக்கமாக அமைச்சரை சபைக்கு அழைத்துப் போவதற்காக வருகிற தேர்சாரட், அன்றும் வந்தது. இல்லத்தில் அம்பிகையின் பூஜையில் ஈடுபட்டிருந்தார் நீலகண்டர். தேர் வந்திருக்கும் தகவலை மகள் வந்து கதவருகில் நின்று கூறிவிட்டுப் போனாள். அம்பாளை உபாசித்துக் கொண்டிருந்த நீலகண்டருக்கு வந்திருந்த தேர் மட்டுமல்லாமல், வந்திருந்தவர்களின் வடிவங்களும் அவர்களின் கரங்களில் இருந்த ஆயுதங்களும் உள்ளத்தில் புலப்பட்டன. ஆமாம், பழுக்கக் காய்ச்சிய இரும்பு வேலோடு அரசரின் பணியாட்கள் வந்திருந்தனர். வேல் கொண்டு நீலகண்டரின் கண்களைப் புண்ணாக்கும்படி அவர்களுக்கு ஆணை.

பணியாட்கள், வேல், காய்ச்சிய இரும்பு... – நீலகண்டருக்கு எல்லாமே புரிந்தது. அரசியின் உடல் மருவைத் தாம் சிற்பிக்குத் தெரியப்படுத்தியதை அரசர் தவறாகப் புரிந்துகொண்டார் என்பதும், என்ன இருந்தாலும் அரசியின் உடலைக் குறித்துத் தான் கூறியது தவறுதான் என்பதும் உணர்ந்தார்.

தவசீலரான அவருடைய அகக்கண்ணில் அனைத்துமே புலப்பட்டுவிட, அம்பிகையின் தீபாராதனைத் தட்டை எடுத்தார். கற்பூரத்தை ஏற்றிக் கண்களில் வைத்துக் கொண்டார். புறக்கண்களில் புண்ணாகிப் போக, கண் பார்வை மறைந்தது.

செய்தி அரசருக்கும் போனது. காய்ச்சிய இரும்போடு பணியாட்கள் வந்திருப்பதை ஞானக் கண்ணில் கண்டு, தன்னுடைய உள்ளத்தில் இருந்த ஆத்திரத்தையும் அகக்கண்ணில் உணர்ந்தவருக்கு, அரசியின் உடல் மருவும் ஞானக் கண்ணில் புலப்பட்டிருக்காதா என்ன? சிந்தித்த அரசருக்குத் தன்னுடைய தவறும் தெரிந்தது. ஓடோடியும் வந்து மன்னிப்புக் கேட்டார்.

அம்பிகையிடம் உளமார அளவளாவிக் கொண்டிருந்த அன்பருக்கு, இதற்கு மேலும் லவுகீக வாழ்வில் பிடித்தம் இருக்குமா? ராஜரீகம், பதவி, அரசவைப் பொறுப்புகள் போன்றவை தேவையில்லை என்னும் எண்ணம் ஏற்பட்டது. அம்பிகையின் திருவடிகளும் அருளும் மட்டுமே நிரந்தரம் என்பது புரிந்தது.

தம்முடைய என்ணத்தை அரசரிடம் தெரிவித்தார். மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான மன்னர், தன்னுடைய தவறை மன்னிக்கும்படி வேண்ட, தமக்கு உதவுவதாக இருந்தால், யாரும் தம்மைத் தொந்தரவு செய்யாத கிராமப் பகுதியைத் தந்துவிடும்படியும், அங்குச் சென்று தியானத்தில் ஈடுபட விரும்புவதாகவும் நீலகண்டர் தெரிவித்தார்.

மதுரையில் இருந்து தெற்காக, பொருநையாற்றங்கரையில், திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் பாலாமடை என்னும் கிராமத்தை நீலகண்டருக்கு அரசர் வழங்கினார். தம்முடைய இறுதிக் காலத்தைப் பாலாமடையில் கழித்த நீலகண்டர், மீனாட்சியம்மையை வழிபட்டுப் பாட, பார்வை இழந்திருந்த கண்களில் மீண்டும் பார்வை வந்ததாக வரலாறு.

மீனாட்சியம்மையை நீலகண்ட தீட்சிதர் போற்றித் துதித்துப் பாடிய சுலோகமே, ஆனந்த சாகர ஸ்தவம் என்பதாகும்.

திருமணக் காலத்தில், அம்மிக் கல்லில் கால் வைத்தாயாமே தாயே. என் மனக் கல்லில் இப்போது உன்னுடைய திருவடிகளைப் பதித்துவிடு அம்மா என்று அம்பிகையிடம் உருகி இறைஞ்சுவார்.

ஏகைக வேதவிஷயா: கதி நாம சாகாஸ்தாஸாம் சிராம்ஸி கதி நாம பிரயம்விதனி

அர்த்தாவோதவிதுரோ.சரலாப ஏவ கேஷாம் நிருணாம் கதிபிரஸ்துசரீரபந்தே:

தாயே! வேதங்களில் எத்தனைக் கிளைகள்! இவை ஒவ்வொன்றிலும் எத்தனை எத்தனை உபநிடதங்கள். இவற்றையெல்லாம், மனமறிந்து கற்பது அன்று, வெறுமனே மனப்பாடம் செய்யக்கூட எத்தனை பிறவிகள் தேவை? என்று அம்பிகையிடம் ஆச்சரியப்படுகிறார்.

அம்பிகையிடம் பரிபூரண பக்தி பூண்டிருந்தவர்.

ஒருமுறை, வழக்கம்போல் இவரை அழைத்துப் போவதற்கான தேர் வந்தது (மேலே குறிப்பிட்ட சம்பவம் நடப்பதற்கெல்லாம் முன்னர்). பணியாட்களிடம் பேசிய மகள், எதேச்சையாக அப்பா வீட்டில் இல்லை, செருப்புத் தைப்பவரிடம் போயிருப்பதாகச் சொல்லிவிட்டாள். ஆனால், பூஜை அறைப்பகுதியில் நீலகண்டர் இருப்பதைக் கண்டுவிட்ட பணியாட்கள் சண்டை போடத் தொடங்கினர். கூச்சல் கேட்டு வெளியே வந்த நீலகண்டர் நடந்ததைச் செவிமடுத்து அப்படியே அமர்ந்துவிட்டார் – ஆமாம், பூஜையில் இருப்பினும், என் சிந்தனை நேற்றுத் தைக்கக் கொடுத்த செருப்பையே எண்ணியிருந்தது. அம்பிகை புரிய வைத்துவிட்டாள் என்றாராம்.

அம்பிகையின் அன்பு இதுதான்! தன்னிடம் அன்பு பூண்டவர்களுக்காக இவள் எதை வேண்டுமானாலும் செய்வாள்.

அபிராமி பட்டருக்காக நிலவை வரவழைத்தாள். காளி தாசருக்காகக் கவித்துவத்தை அருளினாள். நீலகண்ட தீட்சிதருக்காக அரசருக்குத் தெளிவையும், அடியாருக்குப் பார்வையையும் நல்கினாள்.

அம்பிகையைச் சரண் புகுந்தால், அதிக வரம் பெறலாம்தானே!

தொடர்புக்கு:-sesh2525@gmail.com

Tags:    

Similar News