null
- நன்மை விளையும் என நினைத்து செய்யும் செயல் சில நேரத்தில் எதிர்பாராத ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
- கிணறு வெட்டும் போதோ, ஆழப்படுத்தும் போதோ இம்மாதிரியான விஷ வாயுக்கள் வெளியேறும்.
கெணறு வெட்ட பூதம் கெளம்புன கத மாதிரின்னு கிராமத்து பெரியவங்க அடிக்கடி பேச்சுவழக்கில் சொல்லுவதை கேட்டிருப்பீங்க.
நன்மை விளையும் என நினைத்து செய்யும் செயல் சில நேரத்தில் எதிர்பாராத ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
இம்மாதிரியான விளைவுகளை தான் கிணறு வெட்ட போய் பூதம் கிளம்புன கத மாதிரின்னு பழமொழியாய் சொல்வது உண்டு.
நிஜமாக கிணறு வெட்ட பூதம் கிளம்புமா... ஏன் அவ்வாறு சொல்றாங்க..
தேடுதலும், கேள்விகளும் தானே பதிலை தரும்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பியதை பற்றி பார்ப்போம்.
20 வருடங்களுக்கு முன் ஊருக்கு ஒதுக்கு புறமாய் மக்கள் பயன்படுத்தாமல் இருந்த கிணற்றில் அடையும் புறாவை பிடிக்க சென்ற சிறுவன் ஒருவனை பிணமாக மீட்டு வந்தார்கள்...
அந்த சிறுவனை மீட்கும் போது கிணற்றின் கரையில் தலைவிரி கோலமாக அவனின் தாயார் ஒப்பாரி வைத்து அழுத வார்த்தைகள் இன்னும் காதுகளில்..
ஏ மக்கா... எம்மொவனே... படிச்சு படிச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்லுத மாதி சொன்னேனே..
பாங்கெணத்து பக்கம் போவாதே... உள்ளே இறங்காதே... பாங்கெணத்து பூதம் புடிச்சிக்கிடும் தலமூத்த புள்ளையளன்னு சொன்னேனே....
வாடாமல்லி கொத்து மாதி, கருவேப்பில கண்ணு மாதி பொத்தி பொத்தி வளர்த்தேனே... பாதியிலே வுட்டுட்டு போயிட்டியே...
எஞ்சொல்லு கேட்டிருந்தியன்னா நான் கொள்ளியத்து போயிருக்க மாட்டேனே...
அந்த ஒப்பாரி வார்த்தைகளின் அர்த்தம் அன்று புரியவில்லை...
பாங்கெணத்து பூதமா... ஏதோ பேய், பூதம் என்ற அன்றைய நம்பிக்கையில் கடந்து விட்டோம் நான் உட்பட அனைவரும்..
பாங்கெணறு: பயன்படுத்த முடியாமல் பாழாய் போன கிணறு... கிராமங்களில் தண்ணீர் இன்றி அல்லது தண்ணீரை பயன் படுத்தாமல் இருக்கும் கிணறுகளில் கிராம மக்கள் குப்பை கூளங்கள் இறந்து போன ஆட்டுகுட்டி, நாய், பூனை, கோழி என அத்தனையும் தூக்கி எறிய கிட்டத்தட்ட பெரிய அளவு குப்பைதொட்டியாக பயன்படுத்தும் கிணறை பாழ் கிணறு என அழைப்பார்கள்.
இந்த மாதிரியான கிணறுகளில் குப்பைகள், இறந்து போன வளர்ப்புபிராணிகளின் உடல்கள் அழுகி மட்கி போய் அதில் இருந்து கார்பன் மோனாக்சைடு, மற்றும் கந்தக வாயு எனப்படும் ஹைட்ரஜன் டை சல்பைடு வெளிப்படும்.
கந்தக வாயு, நாம் சுவாசிக்கும் பிராண வாயுவான ஆக்சிஜனை விட அடர்த்தியானது, கனமானது என்பதால் கிணற்றின் அடிப்பகுதியிலே தேங்கி இருக்கும்.
சுரேஸ்வரன் அய்யாப்பழம்
100 பி.பி.எம். என்ற அளவில் காணப்பட்டால் சுவாசித்த வெறும் பத்தே விநாடிகளில் ஒரு மனிதனை மரணமடைய செய்யும் வல்லமை கொண்டது இந்த விஷ வாயு.
கந்தக வாயு எளிதில் தானாகவே தீப்பற்றும். மனிதனின் நுகரும் உணர்வை நீக்கும் வல்லமை வாய்ந்தது.
சிறிய அளவு வாயுக்கசிவு அழுகிய முட்டை நாற்றத்தை கொண்டது. அதிக அளவு வாயு கசிவு மனிதனின் நுகரும் உணர்வை அழித்து விடுவதால் அதிக அளவு வாயு கசிவை முகர்ந்து கண்டு பிடிக்க இயலாது.
காற்றில் ஆக்சிஜன் அளவு, சுவாசிக்கும் அளவான 20.6 சதவீதத்தை தாண்டும் போது இந்த வாயு சில சமயம் தானாக தீப்பற்றி எரியும்.
கிணறு வெட்டும் போதோ, ஆழப்படுத்தும் போதோ இம்மாதிரியான விஷ வாயுக்கள் வெளியேறும்.
கல்லில் கடப்பாரை கம்பி உராயும் போது ஏற்படும் தீப்பொறியால் இவ்விஷ வாயு வெளியேறும் போது தீப்பற்றி எரிவதை பேய் பூதம் என முற்காலத்தில் 'கெணறு வெட்ட போய் பூதம் கிளம்பியதாக' கூறியிருக்கின்றனர்.
கிணற்றுக்குள் இவ்வாறு தீப்பற்றி எரிவதை அந்த காலத்தில் கொள்ளி வாய்ப்பிசாசு என சொல்லி இருக்கலாம்.
புறாவை பிடிக்க சென்ற சிறுவன் இவ்வாறான விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம்.
அன்றைய காலங்களில் மக்களுக்கு புரிய வைக்க இத்தகைய விஷ வாயுக்களை பூதம் என பெரியவர்கள் சொல்லி இருப்பார்கள்.
இந்த விஷ வாயு நாம் பயன்படுத்தும் சுற்றுச்சூழல்களில் காணப்படும்.
வெளிக்காற்று செல்லாமல் அடைப்பட்டு இருக்கும் அனைத்து இடங்களிலும் காணப்படும்.
அடைப்பட்டு தண்ணீர் செல்லாமல் இருக்கும் தண்ணீர் குழாய், குளியலறை, கழிவறை தண்ணீர் சேரும் சம்ப், ஓட்டல் எச்சில் கழிவுகள் சேரும் சம்ப், டேங்க் ஆகியவற்றில் அதிகம் காணப்படும்.
இதனை சுத்தம் செய்ய செப்டிக் டேங்க் கிளீனர்ஸ் என்ற பெயரில் வண்டியில் வரும் நபர்களை பார்த்திருப்பீர்கள்.
செய்திதாள்களிலும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மூவர் பலி, நால்வர் பலி என செய்திகளை அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.
முன்பு முந்தைய தலைமுறை இம்மாதிரியான டேங்க் சுத்தம் செய்ய வரும் முன் பலி கொடுக்க கோழி தாங்க! என வீட்டுக்காரரிடம் வாங்கி செப்டிக் டேங்கினுள் கயிறு கட்டி இறக்கி கோழி உயிரோடு இருந்தால் செப்டிக் டேங்கை சுத்தம் செய்வார்கள்.
கிட்டத்தட்ட கோழியை இறக்கி பார்ப்பது காற்றில் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் கேஸ் டெஸ்ட் என சொல்லலாம்.
தற்போதைய தலைமுறை அதனை மூடநம்பிக்கை என ஒதுக்கி வைத்து டாஸ்மாக் சரக்கை உள்ளே தள்ளி விட்டு தள்ளாட்டத்தோடு அந்த செப்டிக் டேங்கை அள்ளுவதை பார்க்கும் போது மனது வலிக்கத்தான் செய்கிறது...
விஷவாயுவால் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த தொழிலாளி பலி! என்ற செய்தியும் மனதை நெருடத்தான் செய்கிறது...
உங்கள் வீட்டுக்கு இம்மாதிரியான தொழிலாளிகள் வந்தால் முதலில் ஒரு கோழியை இறக்கி விட்டு பரிசோதித்த பின்னர் வேலை செய்ய அனுமதியுங்கள்...
ஒரு கோழியின் உயிரை விட ஒரு சக மனிதனின் உயிர் விலை மதிப்பானது தானே...
தொடர்புக்கு-isuresh669@gmail.com