- ஒவ்வொரு நொடியிலும் வாழ்வதுதான் வாழ்க்கை.
- வண்ணத்துப்பூச்சிகளின் அழகு நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
'உன் அன்பின் தன்மைக்கு ஏற்ப, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்ப, உன் வாழ்க்கை இருக்கும்'.
-சாக்ரடீஸ்
நேற்று மரக்கிளைகளில் பசுமையாய் இருந்த இலைகள், இன்று வீதிகளில் உதிர்ந்து கிடக்கின்றன. காலையில் வண்டுகளுக்குத் தேன்வழங்கி மகிழ்ந்த பூக்கள், மாலையில் வாடிச் சுருங்கித் தேடுவாரற்றுக் கிடக்கின்றன. எனினும், அவற்றின் குறுகிய கால வாழ்க்கை அழகானது.
வாழ்வின் செழுமை என்பது ஆயுளின் நீளத்தைப் பொறுத்தது அல்ல; அவரவர் மனதைப் பொறுத்தது.
ஒவ்வொரு நாளும் நமது ஆயுளின் எல்லை குறுகிக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்காக மரணத்தை எண்ணிக் கொண்டிருந்தால், இருக்கின்ற நாட்கள் நரகத்தின் நாட்களாகிவிடும். வாழ்கின்ற நொடிதான் உண்மை. ஒவ்வொரு நொடியிலும் வாழ்வதுதான் வாழ்க்கை.
எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை மண்டைக்குள் போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, ஒருபோதும் வாழ்க்கை ருசிக்காது. சிறகுகளைச் 'சுமை' என்று பறவைகள் கருதுவதில்லை. ஆனால், பல சமயங்களில் மனிதன்தான் தன்னையே தனக்குப் பாரமாகக் கருதுகின்றான்.
இக்கணமே போய்ச் சேர்ந்துவிட்டால் நல்லது என்று எண்ணுகின்றான். மறுகணமே, மரணம் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றான். சாப்பிட உட்காரும்போதே சந்தேகம் வருகிறது. இதைச் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகுமா? இந்தப் பொரியலைத் தொட்டால் சுகர் கூடிவிடுமா? இப்படி அஞ்சி அஞ்சியே தேய்ந்து போகிறான்.
ஆக, மனித வாழ்வில் பெரும்பகுதி பயத்திலேயே கழிந்துவிடுகிறது. யோசித்துப் பாருங்கள். எதற்காகப் பயப்பட வேண்டும்? வாழ்ந்திடத்தானே வந்திருக்கின்றோம். தேவையற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டால் போதும். எது தேவை என்பது தெரிந்துவிடும்.
வண்ணத்துப்பூச்சிகளின் அழகு நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது. அதன் வாழ்வின் ஒவ்வொரு நிலையும் அதிசயம். இலைகளிலும் பூக்களிலும் தண்டுகளிலும் அவை முட்டையிடும். மற்ற உயிரினங்கள் முட்டையிடாத தளிர் இலைகள் இவற்றிற்குப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு.
தளிர் இலை முதிர்ச்சி அடைந்து உதிர்ந்து போக பல மாதங்கள் ஆகும். ஆள் அரவம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுக்கும். ஏனெனில், எதிரிகளின் நடமாட்டம் அங்கு இருக்காது. எனவே, பாதுகாப்பு. இத்தனைக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை ஒருசில வாரங்களில் முடிந்துவிடும். மிகக்குறுகிய காலம்தான். எனினும், வண்ணத்துப்பூச்சி தன் வாழ்க்கையை எவ்வளவு மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறது. அது நமக்குத் தருகின்ற பாடம் அதுதான்.
நெல்லையில் என் கல்லூரிப் படிப்பை முடித்து, நான் சென்னைக்கு வருவதற்குமுன், இரண்டாண்டுகள் மார்த்தாண்டத்தில் ஒரு நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினேன். அந்நாட்களில், அவ்வப்போது கள ஆய்விற்காக வெளியூர் சென்று வருவேன்.
அப்படி ஒருமுறை, நான் உசிலம்பட்டிக்குச் சென்றிருந்தேன். மாலை வரை கள ஆய்வுப்பணி நடைபெற்றது. மறுநாள் அதைப் போன்றதொரு பணிக்காக வேறொரு கிராமத்திற்குச் செல்ல வேண்டும். அந்த ஊருக்குப் பொறுப்பாளரான பணியாளர், அன்று மாலையே அங்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். அன்றுதான் அவர் எனக்கு அறிமுகம். எனினும், பலவருட நட்புபோல் உரிமையுடன் பழகினார்.
கவிஞர் தியாரூ
அப்போது இருட்டத் தொடங்கியிருந்தது. அவருடன் பைக்கில் சென்றேன். வழிநெடுக பேசிக்கொண்டே வந்தார். சற்று நேரத்தில் நன்றாகவே இருட்டிவிட்டது. குறுகலான கரடுமுரடான பாதை. பைக்கின் மங்கலான வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சம் இல்லை. காட்டு வழியில் செல்வதுபோல் இருந்தது. விர்விர் என்று காற்று, வண்டுகளின் இரைச்சல்; எனக்குப் பயம்.
'இன்னும் எவ்வளவு தூரம் போகணும்' என்று கேட்டேன்.
'முக்கால் மணி நேரத்துல போயிடலாம்' என்றார்.
'வேற வழியே கிடையாதா... இந்தப் பாதை ரொம்ப மோசமா இருக்குதே'.
'அடிக்கடி போற வழி. எனக்குப் பழகிப்போச்சி'.
'ஆள் நடமாட்டம், போக்குவரத்து எதுவும் இல்ல. பாதுகாப்பே இல்லாத மாதிரி தெரியுதே'.
'பயமே தேவையில்ல. அக்கம்பக்கத்து ஊர்சனங்க எல்லாரும் நமக்கு வேண்டியவங்கதான்'.
எனக்குப் பயம் நீங்கவில்லை. பேசாம பஸ்ஸில் போயிருக்கலாமோ என்று தோன்றியது. பாதை நீண்டு கொண்டே போவது போல் இருந்தது. நண்பர் நிதானமாகச் சென்று கொண்டிருந்தார். எப்படியோ ஊரை நெருங்கிவிட்டோம். அப்போதுதான் எனக்கு உயிர் வந்தது.
அது ஒரு சிறிய கிராமம். அந்த நண்பர் அவருடைய வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அவரின் மனைவி, சொந்த சகோதரிபோல் என்னை அன்புடன் வரவேற்றார். சின்னஞ்சிறு வீடுதான். ஆனால், வெகு சுத்தமாகவும் ஒழுங்கமைவுடனும் இருந்தது.
சற்று நேரத்தில் இரவு உணவு தயார் செய்துவிட்டார்கள். அருமையான சாப்பாடு; ஆத்மார்த்தமான உபசரிப்பு. அவர்களின் விசாலமான மனதை, அவர்களின் அன்பில் காண முடிந்தது.
நான் தூங்கச் செல்வதற்குமுன், முற்றத்தில் இரண்டு ஸ்டீல் நாற்காலிகளை எடுத்துப் போட்டார் நண்பர். சற்று நேரத்தில், அவரின் மனைவி சுடச்சுட சுக்கு காபி கொடுத்துவிட்டுச் சென்றார்.
'நமக்கு எப்ப கல்யாணம்?' என்று தொடங்கினார் நண்பர்.
'இப்பதான் படிச்சி முடிச்சி வேலைக்கு வந்திருக்கேன். இன்னும் நாலஞ்சி வருஷம் ஆகும்' என்றேன்.
'அப்படியா! நல்லா என்ஜாய் பண்ணுங்க. எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சு'.
'அதுவும் ஜாலிதானே!'
'கதைய கேளுங்க. அவ என் மாமன் பொண்ணு. ரொம்ப செல்லமா வளர்ந்த புள்ள. ஒரு நல்ல இடத்துல கட்டிக் குடுத்தாங்க' என்று அவர் சொன்னதும் 'திடுக்' என்று என் மனதில் ஓர் அதிர்வு ஏற்பட்டது. சுக்கு காபியை உறிஞ்சியபடியே அவர் தொடர்ந்தார்.
'அந்தப் பையன் தங்கமான குணம். இவள கண்ணுபோல பாத்துக்கிட்டான். ஆனா, சோதனையை பாருங்க... அவனுக்கு ரத்தப் புற்றுநோய் வந்து ஒரே வருஷத்துல போய்ச் சேந்துட்டான். கண்ணீரும் கம்பலையுமா இவ கெடந்தா. ரெண்டு வருஷம் கழிச்சி, மறுமணம் செஞ்சி வைக்க பெத்தவங்க நெனச்சப்ப இவ சம்மதிக்கல. அப்புறம் ஒருவழியா பேசி சமாதானம் பண்ணி, மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க'.
என் புருவங்கள் உயர்ந்தன. 'இத கேளுங்க' என்றபடி அவர் சொன்னார்:
'அப்பதான் எனக்கு பொண்ணு பாத்திட்டிருந்த நேரம். நிறைய ரொக்கம், காடு கழனி தர்றோம்னு பொண்ணு வீட்டுக்காரங்க வந்தாங்க. ஆனா, எம்மனசு கேக்கல. பளிச்சின்னு ஒரு யோசனை தோணுச்சி. என் மாமன் பொண்ண கட்டிக்க முடிவு பண்ணிட்டேன்'.
'ஏன் அந்த யோசனை?'
'நான் சொன்னேம்ல... அந்தப்பையன் தங்கம்னா தங்கம். அவ மேல ரொம்ப அன்பு. ஒரு வார்த்தை அதட்டிப் பேச மாட்டான். துரதிர்ஷ்டம்...அவன் போயிட்டான். ரெண்டாந்தாரமா இவள கட்டிக்க வர்றவன் குணங்கெட்டவனாவோ குடிகாரனாவோ இருந்தா இவளால தாங்கிக்க முடியாது. இவளையும் இழந்திடக் கூடாதுன்னு, நானே மாமன்கிட்ட பேசி, அவ சம்மதத்தோட கட்டிக்கிட்டேன். இன்னிக்கு வரை அவள என் உசுராத்தான் நான் வெச்சிருக்கேன்' என்று அவர் சொன்னபோது, அவர் மீதான மரியாதை மலையளவு என்னுள் எழுந்து நின்றது.
'எனக்கு சொற்ப வருமானம்தான். ஆடு, மாடு, கோழி, காடு, கரை எல்லாத்தையும் அவ பொறுப்பா பாத்துக்கிறா. அதுலேயும் கொஞ்சம் வருமானம். எந்தக் குறையும் இல்ல. ரெண்டு குழந்தைங்க. சந்தோஷமான வாழ்க்கை. குடும்பம்தான் எனக்கு சொர்க்கம்' என்று அவர் சிலாகிக்க, மகிழ்ச்சி வெளிச்சம் அவரின் முகமெங்கும் பரவி இருந்தது.
வாழ்வின் சுகம் என்பது செல்வச் செழிப்புகளால் வருவதல்ல என்பதுதான் உண்மை. தனது வங்கிச் சேமிப்பையும் வட்டிக் கணக்கையும் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகின்றவன், ஒருநாளும் நிம்மதியாகத் தூங்கமாட்டான். புண்ணிய காரியம் எதுவும் செய்யாமல், செல்வத்தை மட்டுமே பெருக்கிக் கொண்டிருப்பவன், தன் முதுகில் நரகத்தைச் சுமந்து கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.
நிறைய பேர் அப்படிதான் தங்கள் வாழ்க்கையையே பாரமாக்கிக் கொள்கிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்கும் விரும்ப மாட்டார்கள். சிலர், அறிந்திருந்தாலும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் மனதில்தான், வாழ்வின் மீது கசப்பும் பயமும் அதிகமாகின்றன.
'இந்த வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது' என்று சலித்துக் கொள்பவர்கள் ஒருபுறம். 'இந்த வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது' என்னும் மனநிறைவுடன் வாழ்பவர்கள் மறுபுறம்.
ரசனை முக்கியம். ரசிக்கத் தெரிந்தவன் வாழ்வை நேசிக்கின்றான். வாழ்வை நேசிக்கின்றவன் தன் குடும்பத்தை நேசிக்கின்றான். குடும்பத்தை நேசிக்கின்றவன் ஒவ்வொரு மணித்துளியையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றான்.
ஒவ்வொரு நாளும் நாம் புதிதாய்ப் பிறப்பதுதான் மானுட மகத்துவம். புதிய புதிய சிந்தனைகள். புதிய புதிய பார்வைகள். பெரிய பெரிய கனவுகள். அரிய செயல்கள். நல்ல நட்பு வட்டம். அன்பார்ந்த உறவுகள்...இவையெல்லாம் வேண்டும். அதுதான் அற்புதமான வாழ்க்கை.
நல்ல எண்ணங்கள் நலமிக்க வாழ்வை உருவாக்குகின்றன. எனவே, தீய எண்ணங்களை அப்புறப்படுத்துவோம். வரம் பெறுவதற்குத் தனிமையில் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய நற்சிந்தனைகளும் நற்செயல்களுமே தவம். நம் வாழ்வே வரம்.
கடற்கரையில் ஒரு முதியவர், மீன்பிடி வலையைச் சரிசெய்து கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த ஒருவர் அந்த முதியவரிடம், 'என்ன செய்கிறீர்?' என்று கேட்டார்.
'மீன்பிடி வலையைச் சரிசெய்து கொண்டிருக்கிறேன்' என்றார்.
'இந்த முதிர்வயதில் மீன்பிடிக்கச் செல்வீர்களா?'
'இல்லை'.
'பின்னர் எதற்காக இதைச் செய்கிறீர்கள்?'
'எனக்குப்பின் வருகின்றவனுக்கு இது தேவைப்படும். அதற்காகவே இதை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்' என்றார் அந்த முதியவர்.
மரணத்தைப் பற்றிய பயம் நமக்குத் தேவை இல்லை. அது வரும்போது வரட்டும். வாழ்ந்திருக்கும் ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக்கிக் கொண்டால், இந்த வாழ்வே நம் சொர்க்கம்.
போன்- 9940056332