சிறப்புக் கட்டுரைகள்
ஆன்மிக அமுதம்- பெருமாளும் குடையும்!

ஆன்மிக அமுதம்- பெருமாளும் குடையும்!

Published On 2022-09-29 14:32 IST   |   Update On 2022-09-29 14:32:00 IST
  • திருப்பதி குடை எங்கெல்லாம் ஊர்வலமாகச் செல்கிறதோ அங்கெல்லாம் மங்கலங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.
  • சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் செல்லும் வழியில் வசிக்கும் மக்கள் குடைகளைத் தரிசனம் செய்ய ஆவலுடன் கூடுகின்றனர்.

* கடவுளின் அருட்கொடையால் தான் இந்த உலகமே வாழ்கிறது. கடவுளின் கருணைக் கொடை இல்லாமல் மனித வாழ்க்கை ஏது?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும் இறைவனின் அருட்கொடை தானே? அவை இல்லாமல் உலகம் ஏது? அவற்றின் சேர்க்கை இல்லாமல் உயிர்கள் ஏது?

கொடை கொடுக்கும் இறைவனுக்குக் குடை கொடுக்கிறார்கள் பக்தர்கள். சென்னையில் நடைபெறும் திருப்பதி குடை ஊர்வலம் என்பது அவ்விதத்தில் நடைபெறும் விமரிசையான விழாதான்.

* திருப்பதி குடைகள் பட்டுத்துணி, மூங்கில், ஜரிகை போன்றவற்றால் ஏழு அடி விட்டம் ஏழு அடி உயரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் தயார் செய்யப்படுகின்றன. இந்தப் பணியில் ஆண்டுதோறும் ஆத்மார்த்தமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பக்தர்கள் பலர் உண்டு. சென்னகேசவப் பெருமாள் கோவிலில் குடை தயாரிக்கும் பணி விமரிசையாக நடைபெறும்.

இப்படித் தயாரிக்கப்பட்ட குடைகளை திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க சென்னையில் இருந்து சாலைகள் வழியே எடுத்துச் செல்லும் வைபவத்துக்குத்தான் திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்று பெயர். இந்த ஊர்வலத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆன்மிக கலாசார அமைப்புகள் சென்னையில் உண்டு.

திருமலை ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கும். பிரம்மோற்சவத்தின்போது கோவில் உற்சவரான மலையப்ப சாமியை தினமும் காலையிலும் மாலையிலும் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்.

அப்போது உற்சவமூர்த்திக்கு முன்னும் பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகளை எடுத்துச் செல்வார்கள். சென்னையில் இருந்து புறப்படும் குடைகள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவே காணிக்கையாகச் சமர்ப்பிக்கப்படுகின்றன.

திருப்பதி குடை எங்கெல்லாம் ஊர்வலமாகச் செல்கிறதோ அங்கெல்லாம் மங்கலங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் செல்லும் வழியில் வசிக்கும் மக்கள் குடைகளைத் தரிசனம் செய்ய ஆவலுடன் கூடுகின்றனர்.

குடைவரும் சாலைகளில் கோலமிட்டு அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் மாவிலைத் தோரணங்கள் கட்டி வெடி வெடித்து குடைகளை அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று தரிசிக்கிறார்கள்.

* கேரளத்தில் திருச்சூர் பூரம் உற்சவத்தில் குடைமாற்றும் வைபவம் ஆண்டுதோறும் நிகழ்கிறது. உலக அளவில் குடைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாபெரும் திருவிழா இதுபோல் வேறெதுவும் இல்லை.

இந்த விழாவில் பங்கேற்பதற்கான வண்ணக் குடைகள் பல மாதங்கள் முன்பிருந்தே தயாராகத் தொடங்கிவிடுகின்றன. தெய்வங்களின் உருவங்களும் மகான்களின் வடிவங்களும் வரையப்பட்ட மாபெரும் வண்ணக் குடைகள் இந்த விழாவின் தனிச் சிறப்பு.

திருச்சூர் வடக்குநாதன் கோவில் தெற்கு கோபுர மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட யானைகள் இரண்டு அணிகளாக எதிரும் புதிருமாய் அணிவகுத்து நிற்கும். யானைகள்மேல் அமர்ந்திருப்போர் தங்கள் கைகளில் வண்ணக் குடைகளைத் தாங்கியிருப்பார்கள்.

ஓர் அணி குடைகளைக் காட்சிப்படுத்திய மறுகணம், இன்னோர் அணி போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் குடைகளைக் காட்சிப்படுத்தும். இவ்விதம் நூற்றுக்கணக்கான குடைகள் மீண்டும் மீண்டும் மக்கள் விழிகளுக்கு விருந்தாக யானைகள் மேல் தோன்றும். இரவெல்லாம் தொடரும் இந்த மாபெரும் குடைத் திருவிழாவைக் காண ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கூடுகிறார்கள்.

* வாமன அவதாரத்தில் சிறுவனாக வரும் பெருமாள், மகாபலியிடம் யாசகம் கேட்கச் செல்கிறார். அப்போது அவர் குடைபிடித்துச் செல்கிறார். வாமன அவதாரத் தோற்றங்களில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் கையில் குடையோடு வாமனர் காட்சி தருவதைக் காணலாம். அவரின் பேரழகைக் கண்டு வியந்த மகாபலி அந்த அழகில் சொக்கிப்போய் வாமனர் கேட்டபடி மூன்றடி மண்ணைத் தருகிறேன் என வாக்குறுதி கொடுக்கிறான்.

அடுத்த கணம் வாமனரின் சிறிய உருவம் பேருருவமாக வளர்கிறது. உலகளந்த பெருமாளாக உருக்கொண்டு தம் மாபெரும் காலடியால் மண்ணுலகையும் விண்ணுலகையும் அளக்கிறார் திருமால். மூன்றாமடிக்கு மண் கேட்டபோது தலைகுனிந்த மகாபலியின் தலையில் தன் திருவடியை வைத்தார் அவர் என்கிறது விஷ்ணு புராணம்.

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்

என்ற அழகிய நேரிசை வெண்பா, பொய்கையாழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதிப் பாசுரம். ஆதிசேஷன் திருமாலுக்குச் செய்யும் கைங்கரியங்களைப் பற்றிப் பேசுகிறது இந்த வெண்பா. உலாவும்போது மழை வெய்யில் படாதவாறு குடையாகவும், உட்காரும்போது சிம்மாசனமாகவும், நிற்கும்போது பாதுகையாகவும், உறங்கும்போது மெத்தையாகவும், திருப்பாற்கடலில் தெப்பமாகவும் ஆலயங்களில் விளக்காகவும் அழகிய வஸ்திரமாகவும் தன் சேவையைச் செய்கிறது ஆதிசேஷன் எனச் சொல்லி வியக்கிறார் பொய்கையாழ்வார்.

* அந்தக் கால அரசர்கள் வெண்கொற்றக் குடை வைத்திருந்தார்கள். அது அரச லட்சணங்களில் ஒன்று.

ராமபிரானுக்குப் பட்டாபிஷேகம் நிகழ்ந்தபோது வெண்கொற்றக் குடையை பரதன் பிடித்திருந்தான் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

* கிருஷ்ண அவதாரத்தில் ஒரு மலையே குடையாகிற அதிசயத்தைப் பார்க்கிறோம். இந்திரன் வருணனை ஏவி கோகுலத்தில் கடும் மழை பொழிய வைத்தபோது, கோவர்த்தன கிரியைக் குடையாய்த் தூக்கித்தான் கண்ணன் கோபர்களையும் கோபிகைகளையும் ஆனிரைகளையும் மலையின் அடியில் வரச் செய்து காப்பாற்றுகிறான்.

* தனுர்தாசர் என்னும் இயற்பெயர் கொண்டவர் செல்வந்தர் பிள்ளை உறங்காவில்லி தாசர். அவர் பெரிய மல்யுத்த வீரரும் கூட. மிக அழகிய விழிகளைக் கொண்ட தம் மனைவி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார் அவர்.

ஒருமுறை ராமானுஜர் தம் சீடர்களுடன் நடந்துசென்று கொண்டிருந்தபோது அந்த விந்தையான காட்சியைக் கண்டார். உறங்காவில்லி தாசர் தம் மனைவி பொன்னாச்சிக்குக் குடைபிடித்தவாறு நடந்து சென்ற காட்சி. சற்றும் வெட்கமில்லாமல் மனைவிக்குக் குடை பிடிக்கிறாரே இவர் என்று மக்கள் நகைத்தார்கள்.

ராமானுஜர் கனிவோடு உறங்காவில்லி தாசரை அழைத்து மனைவிக்குக் குடை பிடித்துச்செல்வது ஏன் என வினவினார். தாசர், தம் மனைவியின் விழிகள் மிக அழகியவை என்றும் அந்த விழிகளைக் கடும் வெய்யிலில் இருந்து பாதுகாக்கவே குடைபிடித்துச் செல்வதாகவும் தெரிவித்தார். பொன்னாச்சியின் விழிகளை விடவும் அழகிய விழிகளைக் காண்பித்தால் அந்தக் கண்களுக்கு நீ அடிமையாகச் சம்மதமா என வினவினார் ராமானுஜர். தன் மனைவி விழிகளை விடவும் அழகான விழிகளை உடையவர் யாருமில்லை என உறுதி கொண்டிருந்த உறங்காவில்லி தாசர் அதற்கு ஒப்புக்கொண்டார்.

உறங்காவில்லி தாசரை அரங்கன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் ராமானுஜர். பள்ளிகொண்ட பெருமாளிடம் அவரது அழகிய விழிகளை உறங்காவில்லி தாசருக்குக் காட்டியருளுமாறு ராமானுஜர் வேண்ட எம் பெருமானும் தமது தாமரை மலர்போன்ற நயனங்களை தாசருக்குக் காட்டியருளினார்.

இறைவனது கண்ணை தரிசித்து அதன் பேரழகில் ஈடுபட்ட உறங்காவில்லி அக்கணமே ராமானுஜரிடம் சரணடைந்தார். உறங்காவில்லி தாசரும் அவர் மனைவி பொன்னாச்சியும் திருவரங்கத்துப் பெருமாளின் பக்தர்களானார்கள்.

தம் சீடரான உறங்காவில்லி தாசருக்கு திருவரங்கம் கோவிலின் கருவறை மற்றும் கோவில் நகைகளைக் காக்கும் பணியை ராமானுஜர் ஒப்படைத்தார் எனச்சொல்கிறது ராமானுஜரின் திருச்சரிதம்.

பிள்ளை உறங்கவில்லை தாசரும் அவரது மனைவி பொன்னாச்சியும் திருவரங்கத்திலேயே பரமபதம் அடைந்தனர். மனைவிக்குக் குடை பிடித்தவர், ஆதிசேஷனைக் குடையாய்க் கொண்டவருடன் இரண்டறக் கலந்தார்.

* பிள்ளையார் சதுர்த்திக்கு விநாயகர் வழிபாடு செய்யும் அன்பர்கள் பிள்ளையார் குடை வாங்கிச் சார்த்துகிறார்கள். விநாயகர் சதுர்த்தி நாளில் ஏராளமான சிறிய வண்ணக் குடைகள் விற்பனைக்கு வருகின்றன. வேறு எந்தப் பண்டிகையிலும் கடவுளுக்குக் குடைசார்த்தி வழிபடும் வழக்கமில்லை. விநாயகர் வழிபாடு அந்த வகையில் வித்தியாசமான வழிபாடாக அமைகிறது.

* மழை வெய்யில் இரண்டிலிருந்தும் பாதுகாப்பளிப்பது குடை. வெய்யிலுக்குக் குடைபிடிக்காதவர்கள் உண்டு. ஆனால் மழைக்குக் குடை பிடிக்காதவர்கள் உண்டா?

அடிக்கடி மழைபொழியும் கேரளத்தில் கையில் எப்போதும் குடைபிடித்து நடப்போர் எண்ணிக்கை அதிகம். குடையின் நிறம் கறுப்பு என்று சொல்ல முடியாது. இப்போதெல்லாம் வண்ணக் குடைகளும் ஏராளம் வந்துவிட்டன.

ஆசிரியர் என்றால் குடையோடிருப்பார் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதிலும் ஆசிரியை என்றால் அந்தப் பெண்மணியைச் சித்திரத்தில் காட்டும்போதும், திரைப்படங்களில் சித்தரித்துக் காட்டும்போதும் கையில் குடையைக் கொடுப்பது ஒரு மரபாகிவிட்டது.

* கண்ணன் மழை நேரத்தில் குடையாக இருந்து காப்பாற்றுகிறான் என்கிறார் மகாகவி பாரதியார். வாழ்வில் துன்ப மழை பொழியும்போது பக்திக் குடை பிடித்துத் தானே அந்த மழையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது?

மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்

பாரதியின் முப்பெரும் பாடல்களில் ஒன்றான கண்ணன் பாட்டில் வருகிறது சிந்தனைக் கிளர்ச்சியூட்டும் இந்தப் பாட்டு.

மழைக்குக் குடை கண்ணன் என்று பாரதி சுட்டிக்காட்டியபடி, பாரதியின் சிந்தனை மரபில், கடவுளின் அருளையே குடையாகக் கொள்வோம். துன்ப மழையில் இருந்து காத்துக்கொள்ள கடவுள் அருள் என்ற குடையை நாடிப் பயனடைவோம்.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News