இன்று சர்வதேச மகளிர் தினம்: கிடைத்து விட்டதா பெண் சுதந்திரம்?
- இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள்.
- சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக செயல்பட முடிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இன்று சர்வதேச மகளிர் தினம்...
ஒரு ஆண் ஜெயித்தால் குடும்பம் ஜெயிக்கும். ஆனால் ஒரு பெண் ஜெயித்தால் சமூகமே ஜெயிக்கும்.
பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற வார்த்தைகள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்ற கேள்விக்கு தேசப்பிதாவின் வரிகளை நினைவு கூற வேண்டும். நாட்டின் சுதந்திரத்தை பெண்ணின் சுதந்திரத்துடன் ஒப்பிட்டு அவர் கூறிய வார்த்தைகள்...'நள்ளிரவில் ஒரு பெண் என்றைக்கு கழுத்தில் நகைகள் அணிந்து பயமில்லாமல் தனியாக சாலையில் நடக்க முடிகிறதோ அன்றுதான் நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்து விட்டதாக பொருள்' என்பதாகும். ஆனால் இன்று அந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோமா?
எது சுதந்திரம் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் தான் அதனை பெண்கள் அடைந்து விட்டார்களா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்காமல் பள்ளிக்கூடங்களை நோக்கிய பயணம் தொடங்கியது சுதந்திரம் என்றால்...பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது. விரும்பிய ஆடைகளை அணிவது சுதந்திரம் என்றால்...பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது. பெண்கள் வேலைக்கு போவது, அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது, சுய தொழில் செய்வது போன்றவை தான் சுதந்திரம் என்றால் அதுவும் பெண்களுக்கு கிடைத்து விட்டது.
வீட்டை விட்டு வெளியே வந்து சாதிப்பது தான் சுதந்திரமா..!! அப்படி எடுத்துக்கொண்டால் இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக நம் தமிழ் சமூகத்தில் பெண் சுதந்திரம் இருந்துள்ளது என்று சொன்னால் எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள். அவ்வையார் முதல் காக்கைப்பாடினியார் வரை சங்க காலப் புலவர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏராளமான பெண்பாற்புலவர்கள் உள்ளனர்.
சுதந்திரப்போராட்டத்தில் வீர மங்கை வேலுநாச்சியார் தொடங்கி தில்லையாடி வள்ளியம்மை வரை ஏராளமான பெண் போராளிகள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்றைய நிலையில் மருத்துவம், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம், அறிவியல், அரசியல், பொருளாதாரம் என பல துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். இவர்களெல்லாம் சுதந்திரம் கிடைக்கப் பெற்றவர்கள் என்று சொல்வதை விட, சுதந்திரத்தை எடுத்துக் கொண்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். சாமானியப் பெண்கள் தொடங்கி சாதனைப் பெண்கள் வரை வீட்டில் சுதந்திரமாக செயல்பட முடிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இன்று பெண் உரிமைக்காக ஆண்களும் இணைந்து குரல் கொடுக்கிறார்கள். இது நல்ல மாற்றத்தின் தொடக்கம் தான். ஆனால் இன்று வரை தொடக்கப் புள்ளியிலேயே நின்று கொண்டிருக்கிறோமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. எத்தனை ஆண்களால் 'என் வீட்டில் பெண்களுக்கு சம உரிமையையும், முழு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறோம்' என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். தாயாய், தாரமாய், தோழியாய், மகளாய்.. என பல அவதாரங்கள் எடுக்கும் பெண்ணை பாலியல் பதுமையாய் பார்க்கும் போக்கு இன்னும் மாறவில்லை.
தற்போது வரை நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் எதுவும் அணியாமல் கூட தனியாக செல்ல முடியாது என்ற நிலையே நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பெண்களை வக்கிரமாக விமர்சிக்கும் நபர்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்ணுரிமை பேசும் பெண்களை திமிர் பிடித்தவள் என்று வீட்டுக்கு அனுப்பும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அக்கறை என்ற பெயரிலும், பாதுகாப்பு என்ற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தும் நிகழ்வுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறது. இப்போதைய நிலையில் ஆண்களிடமிருந்து மட்டுமல்ல பெண்களிடமிருந்தும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டிய நிலை உள்ளது. தாய்மார்களும், மாமியார்களும் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும். வீட்டுக்குள் முழு சுதந்திரம் கிடைத்தால் தான் சமூகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியும்.
எனவே மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் தொடங்க வேண்டும். இப்போது சொல்லுங்கள்...எது சுதந்திரம் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?