செய்திகள்

7 விக்கெட்டுக்கள் அள்ளியதால் தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் அஸ்வின்

Published On 2016-07-26 15:23 IST   |   Update On 2016-07-26 15:23:00 IST
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுக்கள் அள்ளியதால் அஸ்வின் ஐ.சி.சி. தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆண்டர்சன் முதல் இடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும், பிராட் 3-வது இடத்திலும், யாசீர் ஷா 4-வது இடத்திலும் இருந்தனர்.

லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு யாசீர் ஷா முக்கிய காரணமாக இருந்தார். அவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். இதே சமயத்தில் ஆண்டர்சன் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் 32 புள்ளிகள் பெற்று 878 புள்ளிகளுடன் யாசீர் ஷா நான்கு இடங்கள் முன்னேறி முதன்முறையாக தரவரிசையில் முதல் இடத்தைப்பிடித்தார். அஸ்வின் (871), ஆண்டர்சன் (868), பிராட் (859), ஸ்டெயின் (841) முறையே 2-வது இடம் முதல் 5-வது இடம் வரை பிடித்தனர்.

இந்நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஆன்டிகுவா டெஸ்டில் அஸ்வின் 7 விக்கெட்டுக்கள் அள்ளி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததோடு, ஆட்டநாயகன் விருதும் பெற்றார். அதே சமயத்தில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் யாசீர் ஷா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதனால் அவர் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அஸ்வின் ஐந்து புள்ளிகள் பெற்று 876 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தார்.

875 புள்ளிகளுடன் ஆண்டர்சன் 2-வது இடத்தில் உள்ளார். பிராட் 852 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். 841 புள்ளிகளுடன் ஸ்டெயின் 4-வது இடத்திலும், யாசீர் ஷா 46 புள்ளிகள் குறைந்து 832 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

Similar News