செய்திகள்

கான்பூர் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 ரன்னில் வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

Published On 2017-10-29 22:05 IST   |   Update On 2017-10-29 22:05:00 IST
கான்பூரில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 ரன்னில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா (147), விராட் கோலி (113) ஆகியோரின் சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.

பின்னர் 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர்குமார் முதல் ஓவர் வீசினார். கொலின் முன்றோ ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி என கடைசி நான்கு பந்தில் 16 ரன்கள் சேர்த்தார்.

மறுமுனையில் பும்ரா சிறப்பாக பந்து வீசினாலும் புவனேஸ்வர் குமார் ரன்கள் கொடுத்த வண்ணம் இருந்தார். 6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மார்ட்டின் கப்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 14 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார்.

2-வது விக்கெட்டுக்கு கொலின் முன்றோ உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. முன்றோ 38 பந்தில் அரைசதம் அடித்தார். நியூசிலாந்து 15 ஓவரில் 100 ரன்கள் எடுத்தது.

மறுமுனையில் விளையாடிய கேன் வில்லியம்சன் 59 பந்தில் அரைசதம் அடித்தார்.  சிறப்பாக விளையாடிய கொலின் முன்றோ 62 பந்தில் 75 ரன்கள் சேர்த்த நிலையில் சாஹல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ராஸ் டெய்லர் களம் இறங்கினார். கேன் வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது நியூசிலாந்து வெற்றிக்கு 128 பந்தில் 170 ரன்கள் தேவைப்பட்டது.

4-வது விக்கெட்டுக்குக்கு ராஸ் டெய்லருடன் டாம் லதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இதனால் ஆட்டத்தால் பரபரப்பு நிலவியது. நியூசிலாந்து அணி 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. 60 பந்தில் 91 ரன்கள் தேவைப்பட்டது.

41-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராஸ் டெய்லர் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஆட்டம் இந்தியாவிற்கு சாதகமாக இருந்தது.

5-வது விக்கெட்டுக்கு டாம் லாதம் உடன் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். டாம் லாதம் 36 பந்தில் அரைசதம் அடித்தார். 44 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்தது. 36 பந்தில் 55 ரன்கள் தேவைப்பட்டது.


45-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 5 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது. 46-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்தில் நிக்கோல்ஸ் 10 ரன்கள் சேர்த்தார். இதனால் கடைசி 24 பந்தில் 35 ரன்கள் தேவைப்பட்டது.

47-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் நிக்கோல்ஸ் க்ளீன் போல்டானார். அவர் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார். இந்த ஓவரில் புவனேஸ்வர் குமார் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கடைசி 18 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் லாதம் ரன்அவுட் ஆனார். அவர் 52 பந்தில் 65 ரன்கள் சேர்த்தார். லாதம் அவுட்டானதும் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.

கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். 2-வது பந்தில் சான்ட்னெர் சிக்ஸ் விளாசினார். என்றாலும் அடுத்த நான்கு பந்தில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க, கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் நியூசிலாந்து 3 ரன்கள் எடுத்தது. 4-வது பந்தில் சான்ட்னெர் ஆட்டமிழந்தார்.

கடைசி இரண்டு பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஒரு ரன்னும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடிக்க, இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

Similar News