சென்னை அணிக்காக சேப்பாக்கத்தில் விளையாட ஆவல்- அஸ்வின்
- இதுநாள் வரைக்கும் ஒவ்வொரு சீசனுக்கும் ரொம்ப வெறியாக பயிற்சி செய்துள்ளேன்.
- சென்னை அணி தனது முதல் லீக்கில் மும்பை இந்தியன்சை வருகிற 23-ந் தேதி சந்திக்கிறது.
சென்னை:
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9¾ கோடிக்கு சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினை வாங்கியது. 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்சுக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் பிறகு புனே சூப்பர் ெஜயன்ட்ஸ், டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு தாவினார்.
10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சொந்த ஊர் அணியில் ஐக்கியமாகியுள்ள 38 வயதான அஸ்வின் தற்போது சக வீரர்களுடன் இணைந்து சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் அளித்த பேட்டியில் 'உண்மையில் இது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது.
நான் இங்கிருந்து வெளியேறி பல ஆண்டுகள் ஆகி விட்டது அல்லவா? மீண்டும் அதே அணிக்கு திரும்பி வந்துள்ளேன். ஆனால் வீரர்கள் எல்லாம் அதே வீரர்கள் தான். இதுநாள் வரைக்கும் ஒவ்வொரு சீசனுக்கும் ரொம்ப வெறியாக பயிற்சி செய்துள்ளேன். ஆனால் இப்போது திடீரென இங்கு (சென்னை) வந்த உடனே மிகவும் சீனியர் வீரராக உணர்கிறேன். ஓ.கே. இதுவும் நல்ல உணர்வு தான். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்' என்றார்.
சென்னை அணி தனது முதல் லீக்கில் மும்பை இந்தியன்சை வருகிற 23-ந் தேதி சந்திக்கிறது.