எங்கள் போராட்டம் சரியாக அமையவில்லை- தோல்வி குறித்து ரோகித் கருத்து
- நிச்சயமாக இவ்வளவு பெரிய இலக்கை இங்கு துரத்த முடியாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
- இந்த போட்டியை டிரா செய்வதற்கு விளையாடினோம். இறுதியில் எங்கள் போராட்டம் சரியாக அமையவில்லை.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 369 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா 234 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாங்கள் போட்டியை விட்டுக் கொடுப்பதற்காக உள்ளே செல்லவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தோல்வி குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. நாங்கள் போட்டியை விட்டுக் கொடுப்பதற்காக உள்ளே செல்லவில்லை. நாங்கள் போராடுவதற்காக சென்றோம். துரதிஷ்டவசமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. இந்த டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொண்டால், எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. 91 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தோம். ஆனால் ஆஸ்திரேலியா கடுமையாக போராடியது.
இதன் காரணமாக எங்களுக்கு 340 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக இவ்வளவு பெரிய இலக்கை இங்கு துரத்த முடியாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே எங்கள் வழியில் நாங்கள் இந்த போட்டியை டிரா செய்வதற்கு விளையாடினோம். இறுதியில் எங்கள் போராட்டம் சரியாக அமையவில்லை
பும்ரா ஒரு பிரில்லியன்ட். தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர் என்ன செய்கிறார் என்பதை நாங்கள் பார்த்துதான் வருகிறோம். அவர் புள்ளி விபரங்களால் பார்க்கக் கூடியவர் இல்லை. அவர் நாட்டிற்காக போட்டிகளை வெல்வதற்காக வந்து எதையும் செய்ய தயாராக இருக்கிறார். துரதிஷ்டவசமாக பந்துவீச்சில் அவருக்கு இன்னொரு முனையில் நல்ல ஆதரவு கிடைக்கவில்லை
என்று கூறி இருக்கிறார்.