null
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி தேர்வு தள்ளிவைப்பு- காலக்கெடுவை நீட்டிக்க ஐ.சி.சி.யிடம் முறையீடு
- சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.
- சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி 19-ந்தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. அதை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துடன் சொந்த மண்ணில் ஐந்து டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 22-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை இங்கிலாந்துக்கு எதிரான தொடர் நடக்கிறது.
அதை தொடர்ந்து இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் 'டிராபி' போட்டியில் பங்கேற்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடை பெறும்.
இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.
15 பேர் கொண்ட அணியை நாளைக்குள் (12-ந்தேதி) அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. அணியில் மாற்றம் செய்ய பிப்ரவரி 13-ந் தேதி வரை ஐ.சி.சி. அனுமதி அளித்து உள்ளது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. வீரர்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) முறையிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி 19-ந்தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக போட்டி தொடங்குவதற்கு 1 மாதத்துக்கு முன்பு அறிவிக்க திட்டமிட்டுள்ளது.