சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி அறிவிப்பதில் தாமதம்
- ஐசிசி-யிடம் நாளைக்குள் பட்டியலை வழங்க வேண்டும்.
- ஐசிசியிடம் கால அவகாசம் கேட்டுள்ளது பிசிசிஐ.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. பொதுவாக தொடர் தொடங்குவதற்கு 35 நாட்களுக்கு (அதாவது 5 வாரம்) முன் பங்கேற்கும் அணிகள் தங்களது வீரர்கள் பட்டியலை ஐசிசி-யிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி நாளைக்குள் வீரர்கள் பட்டியலை அளிக்க வேண்டும். பின்னர் தேவை என்றால் அதில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
ஆனால் இந்திய அணி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீரர்களை பட்டியலை வெளியிட தயாராக இல்லை. இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பிசிசிஐ ஐசிசி-யிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இந்தியா அணி அறிவிப்பு தாமதமாகலாம் எனத் தெரிகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்தியா இங்கிலாந்து அணிக்கெதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அணியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இங்கிலாந்து அணியில் இடம் பெறும் பெரும்பாலான வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் யார் யாரை அணியில் சேர்ப்பது என கலந்து ஆலோசித்து இன்னும் நாளைக்குள் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் அணி அறிவிக்கப்படலாம்.
ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஜடேஜா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.