ஓய்வா?- சந்தேகத்தை எழுப்பும் ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
- டி20 உலகக் கோப்பையை வென்றதும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்தது. இதில் இந்தியா 1-3 எனத் தொடரை இழந்தது. இதற்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக தோற்றது.
இதனால் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா மீது விமர்சனம் எழுந்தது. இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா தொடரில் கடைசி கட்ட போட்டிகளில் விளையாடினார். பேட்டிங்கில் ஓரளவு விளையாடினார்.
இந்த சீசனில் இந்தியா ஏறக்குறைய முக்கியமான தொடர்களை முடித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின்னர் சாம்பியன்ஸ் டிராபி மட்டும்தான் மீதமுள்ளது. இங்கிலாந்து தொடர் வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடக்கிறது.
இதனால் அடுத்த டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பைக்கான அணியை எவ்வாறு தேர்வு செய்வது என்பதில் பிசிசிஐ கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இந்திய ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜடேஜாவை வைக்க வேண்டுமா? என தேர்வுக்குழு தலைவர் அகர்கருடன் கவுதம் கம்பிர் பேசுவார் என செய்திகள் வெளியாகி வருகிறது.
இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெறுவாரா? என்பது தெரியவில்லை. அப்படி இடம் பெறவில்லை என்றால் அவருடைய ஒருநாள் கிரிக்கெட் முடிவுக்கு வருவதாக எடுத்துக் கொள்ளலாம்.
சாமபியன்ஸ் டிராபியில் இடம் பெற்றால் அதற்கு பின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் ஓரங்கட்டப்படலாம் எனத் தெரிகிறது.
அல்லது சப்போர்ட்டிற்காக வைத்துக் கொண்டு இளம் வீரர்களை வளர்த்து அதன்பின் அணியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் தெரிகிறது. இதை அறிந்ததனால்தான் ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் அணிந்திருந்து ஜெர்சி நம்பர் கொண்ட போட்டோவை பதிவு செய்துள்ளார்.
இதன்மூலம் இனிமேல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவேன். தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வருகிறது என்பத சூசகமாக தெரிவிக்கிறார் என நம்பப்படுகிறது.
அவரது ரசிகர்கள் "அவர் ஓய்வு பெறுகிறாரா?" எனவும், "நீங்கள் இங்கிலாந்து தொடரில் தேவை" எனவும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். "இன்னும் 8 வருடங்கள் வருடங்கள் விளையாடுவேன் என்பதை கூறுகிறார்" என ஒரு ரசிகர் வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது.
ஜடேஜா 80 டெஸ்ட் போட்டிகளில் 323 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 24.14 ஆகும். 15 முறை 5 விகெ்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 3370 ரன்கள் அடித்துள்ளார். இதில் நான்கு சதம், 22 அரைசதம் அடங்கும்.
197 ஒருநாள் போட்டிகளில் 220 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 36.07 ஆகும். 13 அரைசதங்களுடன் 2756 ரன்கள் அடித்துள்ளார்.