கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் கோப்பை: இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு.. ஆஸி.-க்கு புதிய கேப்டன் - யாரா இருக்கும்?

Published On 2025-02-05 12:50 IST   |   Update On 2025-02-05 12:50:00 IST
  • கேப்டனாக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறோம்.
  • ஆண்ட்ரூ மெக் டொனால்டு பதில் அளித்துள்ளார்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரகளில் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்பட மூன்று வீரர்கள் பங்கேற்பது கிட்டத்தட்ட சந்தேகத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு பதில் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் விலகும் நிலையில், ஸ்டீவன் ஸமித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருடன் அணியை வழிநடத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறோம். முதல் டெஸ்ட் (இலங்கை அணிக்கு எதிராக) போட்டியில் ஸ்டீவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார்."

"சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் தனது கரியரில் சிறந்து விளங்கியுள்ளார். அந்த வகையில், இவர்கள் இருவரில் ஒருவர். தற்போதைய சூழ்நிலையில், பேட் கம்மின்ஸ் இடம்பெறுவது கடினம் தான். ஹேசில்வுட் தற்போது நலமுடன் இருக்கிறார். எனினும், அவரின் மருத்துவ அறிக்கையை பொருத்து தான் அவர் இடம்பெறுவது பற்றி முடிவு எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் விலகுவது பற்றிய தகவல்கள் அந்த அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்று புதிய வீரர்களுடன் விளையாடும் என்று தெரிகிறது. தொடரில் விளையாடும் அணிகள் தங்களது வீரர்கள் விவரங்களை பிப்ரவரி 12-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைானத்தில் நடைபெற இருக்கிறது. 

Tags:    

Similar News