2-வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் கவுண்டரில் கூட்ட நெரிசல் - மயக்கமடைந்த ரசிகர்கள்
- இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது.
- போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் (பிப்ரவரி 6) நடைபெறுகிறது.
இந்நிலையில், 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் டிக்கெட் வாங்க கூடியதால் டிக்கெட் கவுண்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்டநெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தார். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குடிப்பதற்கு தண்ணீர் கூட அந்த இடத்தில் இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாக்கில் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.