ஒரே இன்னிங்ஸில் அதிக சாதனைகள்.. விராட் கோலி அசத்தல்
- நேற்றைய போட்டியில் அவர் பல சாதனைகளை படைத்தார்.
- க்ரிஸ் கெய்லுக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் உள்ளார்.
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற விராட் கோலி முக்கிய பங்கு வகித்தார்.
36 வயதான விராட் கோலி 3-வது வீரராக களமிறங்கி 84 ரன்கள் (5 பவுண் டரி) எடுத்தார். விராட் கோலியின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. நேற்றைய போட்டியில் அவர் பல சாதனைகளை படைத்தார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அதிக ரன் எடுத்து இருந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவான் சாதனையை முறியடித்தார். தவான் 10 போட்டிகளில் 701 ரன்களை எடுத்துள்ளார். விராட் கோலி 16 இன்னிங்சில் விளையாடி 746 ரன்களை எடுத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை எடுத்த சர்வதேச வீரர்களில் க்ரிஸ் கெய்லுக்கு (791 ரன்) அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார்.
மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவர் 7-வது முறையாக அரை சதம் அடித்துள்ளார். முன்னதாக சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், ஷிகர் தவான் ஆகியோர் தலா 6 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
நாக்-அவுட் போட்டியில் 5-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்து சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 6 முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும் சேசிங்கில் அதாவது 2-வது பேட்டிங்கில் 8 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி அசத்தியுள்ளார் இந்த மைல்கல்லை அவர் தனது 301-வது போட்டியில் 159 இன்னிங்சில் கடுந்துள்ளார்.
டெண்டுல்கருக்கு அடுத்த படியாக அவர் உள்ளார். டெண்டுல்கர் சேசிங்கில் 8720 ரன் (232 இன்னிங்ஸ்) எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஐ.சி.சி. ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 24-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்து டெண்டுல்கரை முந்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 23-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் விராட் கோலி 2 கேட்ச் பிடித்தார். ஒருநாள் போட்டியில் இதன் மூலம் அதிக கேட்ச் பிடித்த வீரர்களில் அவர் 2-வது இடத்தில் உள்ள ரிக்கி பாண்டிங்கை (ஆஸ்திரேலியா) முந்தினார். கோலி 161 கேட்ச்களையும், ரிக்கி பாண்டிங் 160 கேட்ச்களையும் பிடித்துள்ளனர். ஜெயவர்தனே (இலங்கை) 218 கேட்ச்களை பிடித்து முதலிடத்தில் உள்ளார்.