null
ஐ.சி.சி. வரலாற்றில் முதல் முறை.. எம்.எஸ். தோனியை மிஞ்சிய ரோகித் சர்மா
- இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
- முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான அரையிறுதி போட்டி அமைந்தது.
சமபலம் வாய்ந்த அணிகள் மோதியது, இந்திய அணி நாக்-அவுட் சுற்று போட்டிகளில் கடந்து வந்த தோல்விகள் என பல்வேறு காரணங்களால் நேற்றைய போட்டி இந்திய அணி மற்றும் ரசிகர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக மாறியது. இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை யாரும் படைத்திராத சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. நடத்தும் நான்கு வகை கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
ஏற்கனவே டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி பெற்றிருந்தார். இவர் தலைமையில் இந்திய அணி 2007, 2009 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஐ.சி.சி. கோப்பையை வென்று அசத்தியது.
எனினும், எம்.எஸ். தோனி ஓய்வு பெறும் வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கப்படவில்லை. அந்த வகையில் இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இதையடுத்து, எம்.எஸ். தோனி இதுவரை எட்டாத சாதனையை ரோகித் சர்மா தற்போது படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐந்து முறை முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதுவரை வேறு எந்த அணியும் மூன்று முறைகளுக்கு மேல் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இல்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஐ.சி.சி. நடத்திய அனைத்து வித கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இத்தகைய சாதனையை படைத்த முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்த கேப்டனும் பெறாத பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.