சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: 108 ரன்கள் விளாசிய ரச்சின் ரவீந்திரா- கேன் வில்லியம்சன் அரைசதம்
- 47 பந்தில் அரைசதம் அடித்த ரச்சின் ரவிந்திரா, 93 பந்தில் சதம் அடித்தார்.
- கேன் வில்லியம்சன் 61 பந்தில் அரைசதம் அடித்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், பி பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக, அதேநேரம் பந்து பந்துக்கு ரன் என்ற அடிப்படையில் விளையாடினர்.
என்றாலும் வில் யங்கால் நீண்ட நேரம் நீடிக்க முயடிவில்லை. நியூசிலாந்து ஸ்கோர் 7.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது 23 பந்தில் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ரச்சின் ரவீந்திரா உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாட, ரச்சின் ரவீந்திரா தனது வழக்கமான பாணியில் விளையாடினார். இதனால் முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்தது.
ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 47 பந்தில் அரைசதம் விளாசினார். ரச்சின் ரவீந்திரா- கேன் வில்லியம்சன் ஜோடி 56 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்த 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25 ஓவர் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. ரச்சின் ரவீந்திரா 80 ரன்னுடனும், கேன் வில்லியம்சன் 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடினர். கேன் வில்லியம்சன் 61 பந்தில் அரைசதம் கடக்க, ரச்சின் ரவீந்திரா 93 பந்தில் சதம் அடித்தார். நியூசிலாந்து 32 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.
நியூசிலாந்தின் ஸ்கோர் 33.3 ஓவரில் 212 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரச்சின் ரவீந்திரா 101 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்ஸ் உடன் 108 ரன்கள் விளாசி ரபடா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது.
3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்துள்ளார். கேன் வில்லியம்சன் 80 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.