தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து 3 சதங்கள் விளாசிய கேன் வில்லியம்சன்
- ஐசிசி தொடரில் கேன் வில்லியம்சன் 4 சதங்கள் அடித்துள்ளார்.
- சர்வதேச ஒருநாள் போட்டியில் 15-வது சதம் இதுவாகும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி 91 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 94 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 39.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் குவித்திருந்தது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சனின் 15-வது சதம் இதுவாகும். மேலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து 3 சதங்கள் அடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக 48 சதங்கள் விளாசியுள்ளார். தற்போது விளையாடும் வீரர்களில் விராட் கோலி 82 சதங்களும், ஜோ ரூட் 53 சதங்களும், ரோகித் சர்மா 49 சதங்களும், ஸ்டீவ் ஸ்மித் 48 சதங்களும் அடித்துள்ளார்.
ஐசிசி தொடரில் கேன் வில்லியம்சன் 4 சதங்கள் அடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.
நாதன் ஆஸ்லே இந்தியாவுக்கு எதிராக 5 சதமும், ராஸ் டெய்லர் இங்கிலாந்துக்கு எதிராக 5 சதமும் அடித்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேன் வில்லியம்சன் 4 சதங்கள் அடித்துள்ளார்.