இந்த கேள்விக்கு சரியான நபர் நான் அல்ல... இந்திய அணி தேர்வு குறித்து கருண் நாயர் பதில்
- விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்கள் விளாசினார்.
- ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடியவர் கருண் நாயர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முச்சதம் விளாசியுள்ளார். இவர் தற்போது உள்நாட்டு போட்டிகளில் விதர்பா அணிக்காக அபாரமாக விளையாடி வருகிறார். இதனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
விஜய் ஹசாரே (50 ஓவர் போட்டி) தொடரில் 9 போட்டிகளில் ஐந்து சதம், ஒரு அரைசதத்துடன் 779 ரன்கள் விளாசினர். இதனால் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடம் கிடைக்கவில்லை.
தற்போது ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். கேரளாவிற்கு எதிராக நடைபெற்று வரும் இறுதிப் போட்டியின் 2-வது இன்னிங்சில் சதம் விளாசியுள்ளார். இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மொத்தம் 860 ரன்கள் அடித்துள்ளார். இதில் 4 சதம் அடங்கும். மொத்தம் இந்த சீசனில் 9 சதங்கள் அடித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்திற்குப் பிறகு சிறப்பாக விளையாடும் உங்களுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு கருண் நாயர் பதல் அளித்து கூறியதாவது:-
இந்த கேள்வியை கேட்பதற்கு நான் சரியான நபர் கிடையாது. இதுகுறித்து என்னால் கருத்து கூற முடியாது. நான் சொல்வது எல்லாம், ஒவ்வொரு போட்டியிலும் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என பார்க்கிறேன். அது நடைபெற்றால் (இந்திய அணியில் தேர்வு செய்தால்) அது நடக்கும். என்னுடைய வேலையை நான் சிறப்பாக செய்ய வேண்டும். அதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.
இவ்வாறு கருண் நாயர் தெரிவித்தார்.