சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? நியூசிலாந்துடன் நாளை மோதல்
- இரு அணிகளுமே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
- இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார்.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேற்றப்பட்டன.
பி பிரிவில் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து வெளியேறியது 2-வது அணியாக தகுதி பெறுவதற்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் (தலா 3 புள்ளிகள்) உள்ளன.
இதில் தென் ஆப்பிரிக்காவுக்கே அதிகமான வாய்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்திடம் தோற்றாலும் பாதிப்பு இருக்காது. ஏனென்றால் அந்த அணி நிகர ரன் ரேட்டில் 2.140 ஆக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் ரன் ரேட்-0.990 ஆகும்.
இந்தப் போட்டி தொடரின் கடைசி லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்தையும், 2- வது போட்டியில் பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. துபாயில் மட்டுமே விளையாடும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார். தொடைநார் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட மாட்டார். அணியின் துணை கேப்டனான சுப்மன்கில் கேப்டனாக பணியாற்றுவார். ரோகித்சர்மா இடத்தில் ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும். சுப்மன்கில்லும், கே.எல். ராகுலும் தொடக்க வரிசையில் ஆடுவார்கள்.
இதேபோல வேகப்பந்து வீரர் முகமது ஷமியும் முழு உடல்தகுதியுடன் இல்லை. அவரது இடத்தில் அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார்.
இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரும் பந்து வீச்சில் ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 60 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2-வது பேட்டிங் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.
அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் டாம் லாதம், ரச்சின் ரவீந்தர், வில் யங், பிலிப்ஸ் ஆகியோரும் பந்து வீச்சில் பிரேஸ்செல், வில்லியம் ரூர்கே, கேப்டன் சான்ட்னெர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுகிறது. 119-வது போட்டியாகும். இதுவரை நடந்த 118 ஆட்டங்களில் இந்தியா 60-ல் நியூசிலாந்தில் 50-ல் வெற்றி பெற்றார். ஒரு போட்டி டை ஆனது. 7 ஆட்டம் முடிவு இல்லை.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.