
சி.எஸ்.கே.வுக்காக அதிக ரன்: ரெய்னா சாதனையை முறியடிக்க எம்.எஸ். தோனிக்கு 19 ரன்களே தேவை
- சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4687 ரன்கள் அடித்துள்ளார்.
- எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார்.
18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா படைத்துள்ள சாதனையை எம்.எஸ். தோனி முறியடிக்க உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
ரெய்னாவின் சாதனையை இந்த சீசனில் தோனி முறியடிக்க உள்ளார். அதற்கு அவருக்கு இன்னும் 19 ரன்களே தேவை. எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.
ஜடேஜா இன்னும் 8 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் கைப்பற்றிய சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை பெறுவார். பிராவோ 140 விக்கெட் (116 போட்டி) வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்சிஸ் வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா 172 போட்டியில் 133 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த சீசனில் சில போட்டிகளில் ஆட வில்லை. அவர் 6 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனையை பெறுவார். மலிங்காவை (170 விக்கெட்) முந்துவார். பும்ரா 165 விக்கெட் எடுத்துள்ளார்.