எச்சில் பயன்படுத்துவதால் மிகப்பெரிய மாறுபாட்டை கொடுக்கும் என நினைக்கவில்லை: வருண் சக்ரவர்த்தி
- எச்சில் பயன்படுத்தி பந்தின் ஒரு பக்கத்தை பளபளப்பாக வைத்திருக்க முடியும்.
- அப்படி பளபளப்பாக வைத்திருந்தால் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகி பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசனில் சில மாற்றங்களை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது அதில் ஒன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தலாம். மற்றொன்று இரவு நேர ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது மற்றொரு புதுப்பந்து பயன்படுத்தலாம் என்பது.
எச்சில் பயன்படுத்துவதால் பந்தின் ஒரு பக்கத்தை எப்போதும் பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம் இது ரிவர்ஸ் ஸ்விங் ஆக மிகவும் உதவியாக இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் டெத் ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங்கை பயன்படுத்தி விக்கெட் வீழ்த்த முடியும்.
இந்த நிலையில் வருண் சக்ரவர்த்தி இது குறித்து கூறியதாவது:-
எச்சில் பயன்படுத்துவதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் மாறுபாடு கொடுக்கும் என நான் நினைக்கவில்லை. பனிப்பொழிவு காரணமாக பந்து மாற்றப்பட்டால் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
11ஆவது, 12ஆவது ஓவர்களில் பந்து மாற்றப்படும்போது அப்போது சுழற் பந்துவீச்சாளர்கள் பந்து வீசி கொண்டு இருப்பார்கள். பந்து ஈரமாக இருக்காது. பந்து ஈரமாகாது. இதனால் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இவ்வாறு வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்போது முகமது ஷமி, பந்துவீச்சாளர் எச்சில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஐசிசி-க்கு கோரிக்கை வைத்திருந்தார். அப்படி அனுமதித்தால் பந்து தொடர்ந்து பளபளப்பாக இருக்கும். ரிவர்ஷ் ஸ்விங் ஆகி ஆட்டத்தில் சுவாரசியத்தை கொடுக்கும் எனக் கூறியிருந்தார். இதேபோல் முகமது சிராஜ் எச்சில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆதரவான கருத்து தெரிவித்திருந்தார்.
கொரோனா தொற்று ஏற்படும்போது முன்னெச்சரிக்கை காரணமாக எச்சில் பயன்படுத்த ஐசிசி இடைக்கால தடை விதித்திருந்தது. பின்னர் 2022 ஆம் ஆண்டு ஐசிசி அதற்கு நிரந்தர தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து பிசிசிஐ-யும் அந்த விதிமுறையை பயன்படுத்தி வந்தது. இந்த நிலையில்தான் தற்போது 2025 சீசனுக்காக அந்த தடையை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.