ஐ.பி.எல்.

IPL 2025: குறுக்க இந்த கௌசிக் வந்தா.. நாளைய தொடக்க ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு

Published On 2025-03-21 14:15 IST   |   Update On 2025-03-21 14:15:00 IST
  • 18-வது ஐ.பி.எல். திருவிழா நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
  • இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப் போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் அமைந்தது.

இதுவரை 17 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக தலா 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளன.

18-வது ஐ.பி.எல். திருவிழா நாளை (சனிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. மே 25 வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் ( வரிசை 1) நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2), ராஜஸ்தான் ராயல்ஸ் (3), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (4), பஞ்சாப் கிங்ஸ் (5) ஆகியவையும், பி பிரிவில் மும்பை இந்தியன்ஸ் (1), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2), குஜராத் டைட்டன்ஸ் (3), டெல்லி கேப்பிடல்ஸ்(4), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (5) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வரிசைப்படி 2 தடவை விளையாட வேண்டும். மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை ஆட வேண்டும். உதாரணத்திற்கு சி. எஸ்.கே. அடுத்த பிரிவில் உள்ள மும்பையுடன் மட்டும் 2 போட்டியில் ஆடும். ஒவ்வொரு அணியும் 14 ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளே ஆப் சுற்றில் 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் 'குவாலிபையர் 2' போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதி போட்டிக்குள் நுழையும்.

மே 18- ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. பிளே ஆப் சுற்று மே 20- ந் தேதி தொடங்குகிறது. அன்று 'குவாலிபையர் 1' போட்டியும், மறுநாள் 21-ந் தேதி எலிமினேட்டர் ஆட்டமும் ஐதராபாத்தில் நடக்கிறது. குவாலிபையர் 2 ஆட்டம் 23- ந் தேதியும், இறுதிப்போட்டி மே 25- ந் தேதியும் நடைபெறுகிறது.

58 நாட்கள் லீக் ஆட்டங்கள் நடைபெறும். இதில் 12 நாட்களில் மட்டும் 2 போட்டிகள் நடைபெறும். மற்ற தினங்களில் ஒரே ஒரு ஆட்டம் நடைபெறும்.

நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.

ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியும் 6-வது பட்டத்துக்காக காத்திருக்கிறது. பெங்களூர், பஞ்சாப், டெல்லி, லக்னோ அணிகள் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளன. ஐ.பி.எல். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் ஜியோ ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த சீசனின் முதல் போட்டியான கொல்கத்தா - பெங்களூரு ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் போட்டி நடைபெறும் அன்றைய தினம் கொல்கத்தாவில் மழை பெய்ய 70-90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இதன் காரணமாக இந்த போட்டி பெருமளவில் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் அன்றைய தினம் அந்த பகுதிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மறுநாளான ஞாயிற்றுக்கிழமையும் அந்த பகுதிக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட படி போட்டி நடைபெறுமா? என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Tags:    

Similar News