எங்களுக்குனே வருவீங்களா? ஐ.பி.எல்.-இல் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணி - எல்லாம் ஆர்.சி.பி. ராசி..
- குறைந்த தூரம் பயணிக்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இருக்கிறது.
- ஐ.பி.எல். லீக் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 8,536 கிலோமீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறது.
திருவனந்தபுரம்:
கிரிக்கெட் போட்டிகளில் அனைவரும் விரும்பி பார்க்கும் போட்டியாக ஐ.பி.எல். உள்ளது. 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு அணி வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள்.
பேட்டிங்கில் அனைத்து அணிகளுமே அதிரடி காட்டுவதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐ.பி.எல். போட்டி பெரும் விருந்தாக இருக்கிறது. 18-வது ஐ.பி.எல். போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை(22-ந்தேதி) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் போட்டி நடக்கும் நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கிறார்கள்.
போட்டியில் பங்கேற்கும் நேரம் மிகக் குறைவு என்றாலும், பயணிக்கும் தூரம் மற்றும் நேரம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதில் அதிக தூரம் பயணிக்கும் அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருக்கிறது.
சுமார் 2 மாதங்கள் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட பெங்களூரு அணி பல நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கிறது. அந்த அணியின் வீரர்கள் லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள்.
நாளை முதல் போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா சென்றுள்ள அந்த அணி வீரர்கள், நாட்டின் தெற்கில் உள்ள சென்னைக்கு வருகிறார்கள். பெங்களூரு அணி வீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் 1,500 கிலோமீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்க வேண்டி உள்ளது.
ஐ.பி.எல். கோப்பையை இந்த முறையாவது வென்று விட வேண்டும் என்ற இலக்குடன் விளையாட உள்ள பெங்களூரு அணி வீரர்களுக்கு அதிக தூர பயணம் என்பது சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதே நேரத்தில் குறைந்த தூரம் பயணிக்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இருக்கிறது. அந்த அணி ஐ.பி.எல். லீக் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 8,536 கிலோமீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறது. இது அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஐதராபாத் அணி இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் 4 போட்டிகளை சொந்த மைதானமான ஐதராபாத்தில் விளையாடுகிறது. அந்த அணி வீரர்கள் முதல் வெளியூர் போட்டிக்காக 500 கிலோ மீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறார்கள். இதேபோல் மற்ற அணிகளும் பயணிக்கும் தூரம் தொடர்பான விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 16,184 கிலோமீட்டரும், பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் 14,341 கிலோமீட்டரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் 13,537 கிலோ மீட்டரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 12,730 கிலோமீட்டரும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் 12,702 கிலோ மீட்டரும், குஜராத் டைட் டன்ஸ் அணி வீரர்கள் 10,405 கிலோமீட்டரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர்கள் 9,747 கிலோ மீட்டரும், டெல்லி கேப்பிட் டல்ஸ் அணி வீரர்கள் 9,270 கிலோமீட்டரும் விமானத்தில் பயணிக்கிறார்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட நிலையில் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணி வீரர்கள் போட்டிகளில் விளையாட ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பறக்க வேண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.