ஐ.பி.எல்.

சென்னை, மும்பை வெற்றிகரமான அணிகளாக இருக்க இதுவும் ஒரு காரணம்- எல்.பாலாஜி

Published On 2025-03-20 07:42 IST   |   Update On 2025-03-20 07:42:00 IST
  • சென்னை , மும்பை போன்ற அணிகள் எப்போதும் தங்களது பெரிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.
  • சென்னை, மும்பை அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு சவால் இன்னும் அதிகமாக இருக்கும்.

சென்னை:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் (சென்னை அணிக்காக) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் எல்.பாலாஜி. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அவர் தற்போது வர்ணனை பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் நேற்று காணொலி வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் இடத்துக்கு டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கர்ரன், பதிரானா ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் ஆர்.அஸ்வின், ஜடேஜா என்று இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (ஆப்கானிஸ்தான்) வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டி இருக்கும்.

கடந்த சில சீசனில் சென்னை அணியில் நிறைய ஆல்-ரவுண்டர்கள் இருந்ததால் சில சமயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த சீசனில் அதிக ஆல்-ரவுண்டர்கள் இல்லை. எனவே சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் சென்னை அணியின் முக்கியமான வீரராக இருப்பார். 'பவர்-பிளே'யிலும், இறுதிகட்டத்திலும் அவரால் சிறப்பாக பந்து வீச முடியும்.

உள்ளூர் வீரர் என்பதால் சேப்பாக்கம் ஆடுகளம், சூழலை நன்கு அறிந்தவர். இங்கு எப்போதும் ஆடினாலும் அசத்தி இருக்கிறார். இங்கு முன்பு சென்னைக்கு எதிரான ஒரு முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சுக்காக களம் இறங்கிய போது 30 ரன் மற்றும் 2 விக்கெட் (2023-ம் ஆண்டு) எடுத்திருந்தார். எனவே அவரது பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியமாகும். அதனால் இங்குள்ள சூழலில் எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

18-வது ஐ.பி.எல்.-ல் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எதுவாக இருக்கும் என்று கேட்கிறீர்கள். இந்த ஆண்டு எல்லா அணிகளுமே நன்றாக உள்ளன. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் எல்லா அணிகளுமே புதிய அணிகள். ஏனெனில் நிறைய வீரர்கள் வேறு அணிக்கு மாறியிருக்கிறார்கள். ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணியில் இருந்து பஞ்சாப்புக்கு போய் இருக்கிறார். லோகேஷ் ராகுல் லக்னோவில் இருந்து டெல்லிக்கு மாறியுள்ளார்.

ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு சென்று இருக்கிறார். இவர்கள் அங்கு முதலில் தங்களை வலுவாக நிலைநிறுத்தி, வெற்றிக்குரிய, நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். அணி உரிமையாளர்களுடன் நல்ல அணுகுமுறை இருக்க வேண்டும். வீரர்களின் ஓய்வறை சூழல் சிறப்பாக இருக்க வேண்டும். இப்படி நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டி இருப்பதால் புதிய அணிகளுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். எனவே முதல் 4-5 ஆட்டங்களுக்கு பிறகே ஒவ்வொரு அணியையும் மதிப்பிட முடியும்.

இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் எப்போதும் தங்களது பெரிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் வெற்றிகரமான அணிகளாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சென்னை, மும்பை அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு சவால் இன்னும் அதிகமாக இருக்கும்.

இதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த 4 அணிகளும் தங்களுக்கே உரிய கிரிக்கெட்டை சிறப்பாக விளையாடி இருக்கின்றன. வரும் சீசனிலும் அவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

'ஹாட்ரிக்' விக்கெட் குறித்து கேட்கிறீர்கள். 'ஹாட்ரிக்' விக்கெட்டை திட்டமிட்டு எடுக்க முடியாது. அது நடப்பது அரிது. போட்டிக்குரிய நாளில் சூழல் சாதகமாக அமைந்து, அதிர்ஷ்டமும் இருந்தால் 'ஹாட்ரிக்' விக்கெட் சாதனை படைக்க முடியும்.

இவ்வாறு பாலாஜி கூறினார்.

Tags:    

Similar News