கிரிக்கெட் (Cricket)
null

பார்டர்-கவாஸ்கர் தொடர்: பல சாதனைகள் படைத்த பும்ரா

Published On 2024-12-30 05:03 GMT   |   Update On 2024-12-30 05:09 GMT
  • பார்டர்-கவாஸ்கர் தொடரில் 30 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.
  • இன்னும் 3 விக்கெட் எடுத்தால் அவர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாதனையை முறியடிப்பார்.

மெல்போர்ன்:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அபாரமாக பந்து வீசி வருகிறார். வேகப்பந்து வீச்சாளரான அவர் முதல் டெஸ்டில் 8 விக்கெட்டும் (5+3), 2-வது டெஸ்டில் 4 விக்கெட்டும், 3-வது டெஸ்டில் 9 விக்கெட்டும் (6+3) கைப்பற்றினார்.

4-வது டெஸ்ட் தொடங்கும் முன்பு பும்ரா 21 விக்கெட் எடுத்து இருந்தார். மெல்போர்னில் தற்போது நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் அவர் 4 விக்கெட் கைப்பற்றினார். 2-வது இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

5-வது விக்கெட்டாக இன்று நாதன் லயனை அவுட் செய்தார். இதன் மூலம் பும்ரா இந்த தொடரில் 30 விக்கெட்டை வீழ்த்தினார்.

பார்டர்-கவாஸ்கர் தொடரில் 30 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். இன்னும் 3 விக்கெட் எடுத்தால் அவர் ஹர்பஜன்சிங் சாதனையை முறியடிப்பார்.

சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 32 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

பும்ரா 3-வது முறையாக இந்த தொடரில் 5 விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் பிபுன்சிங் பெடி, பி.எஸ்.சந்திரசேகர், கும்ப்ளே ஆகியோரை அவர் சமன் செய்தார். மெல்போர்ன் மைதானத்தில் 9 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். பும்ரா 44 டெஸ்டில் 203 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அவர் 13 முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

குறைவான ரன் விட்டுக்கொடுத்து 200 விக்கெட் வீழ்த்தி வரலாறு படைத்தார் பும்ரா

இந்திய வேகப்பந்து வீச்சாளர் 31 வயதான ஜஸ்பிரித் பும்ரா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். இதில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்திய போது அது அவரது 200-வது விக்கெட்டாக (44 டெஸ்ட்) அமைந்தது. இதன் மூலம் பும்ரா பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

200 விக்கெட்டுகள் வீழ்த்திய உலக அளவில் 85-வது வீரர், இந்திய அளவில் 12-வது வீரர் ஆவார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய 2-வது இந்தியர் என்ற சிறப்பை ஜடேஜாவுடன், பும்ரா பகிர்ந்துள்ளார். இந்திய பவுலர்களில் இந்த இலக்கை அதிவேகமாக தொட்டவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான். அவர் 37 டெஸ்டுகளிலேயே 'டபுள்செஞ்சுரி' விக்கெட்டை எடுத்து விட்டார்.

பும்ரா சராசரியாக 19.56 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்துள்ளார். 20-க்கும் குறைவான சராசரியுடன் 200 விக்கெட்டை வீழ்த்திய ஒரே பவுலர் பும்ரா தான்.

200 விக்கெட்டுகளை எடுப்பதற்கு அவர் 3,912 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். குறைவான ரன் விட்டுக்கொடுத்து 200 விக்கெட் வீழ்த்திய வகையிலும் பும்ராவுக்கே முதலிடம். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் ஜோயல் கார்னெர் 4,067 ரன்கள் வழங்கி இந்த மைல்கல்லை அடைந்ததே சாதனையாக இருந்தது.

குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டை மகசூல் செய்த சாதனையாளர் பட்டியலில் பும்ரா 4-வது இடத்தில் உள்ளார். இதற்காக அவர் 8,484 பந்துகள் வீசி இருக்கிறார். முதல் 3 இடங்களில் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் (7,725 பந்து), தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் (7,848 பந்து), ககிசோ ரபடா (8,154 பந்து) உள்ளனர்.

புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் மட்டும் பும்ரா 23 விக்கெட்டுகள் (3 டெஸ்ட்) வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்தியர் என்ற சாதனையை தனதாக்கினார். அனில் கும்பிளே சிட்னி ஸ்டேடியத்தில் 20 விக்கெட் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

Tags:    

Similar News