கிரிக்கெட் (Cricket)

மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி சாதகமாக உள்ளது- நாசர் ஹூசைன் விமர்சனம்

Published On 2025-02-25 20:53 IST   |   Update On 2025-02-25 20:53:00 IST
  • ஒவ்வொரு மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, மற்ற அணிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கும்.
  • துபாயில் மட்டுமே இந்திய அணி ஆடுவதால், வேறு மைதானங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

துபாய்:

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, தங்களது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுவது, மற்ற அணிகளை விட அதிக வாய்ப்புகளையும், நன்மைகளையும் அளிக்கிறது என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

துபாயில் மட்டுமே இந்திய அணி ஆடுவதால், வேறு மைதானங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம், மற்ற அணி வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கும், பாகிஸ்தானிலேயே மூன்று நகரங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய வேண்டியது இருக்கும். ஒவ்வொரு மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, மற்ற அணிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கும்.

ஒவ்வொரு பிட்ச்சின் தன்மைக்கு ஏற்ப, அணி தேர்வில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், இந்திய அணி எங்குமே பயணம் செய்ய வேண்டியது இல்லை. அவர்களுக்கு ஒரே ஹோட்டல், ஒரே ஓய்வறை, ஒரே மைதானம் என அனைத்துமே பழகிப் போயிருக்கும்.

மேலும், துபாய் மைதானத்தில் உள்ள பிட்ச்சில் சுழற் பந்துவீச்சு எடுபடும் என்பதால், இந்திய அணி 5 சுழல் பந்துவீச்சாளர்களை 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்திருக்கிறது.

அதே சமயம், பாகிஸ்தானில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட்கள் கிடைக்கும் என்பதால், மற்ற அணிகள் ஒன்று அல்லது இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே தங்கள் உத்தேச அணியில் தேர்வு செய்துள்ளன. உதாரணத்திற்கு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியிலும் இந்த வித்தியாசம் பெரிய அளவில் தெரிந்தது.

பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு முழு நேர சுழல் பந்துவீச்சாளர் மட்டுமே இடம்பெற்று இருந்தார். ஆனால், இந்திய அணியில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் ஆடினர். இந்திய அணிக்கு, தாங்கள் ஆடும் அனைத்து போட்டிகளுமே துபாயில் நடைபெறப் போகிறது என்பது தெரிந்ததால் தான், ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளனர்.

இந்தியாவிற்கு தங்கள் சூழ்நிலை முன்பு தெரிந்திருப்பதால், அதை பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போதைக்கு அவர்கள் தங்கள் பணியை மட்டும் சிறப்பாக செய்தால், மற்றொரு சர்வதேச கோப்பையை வெல்வார்கள்.

என நாசர் ஹுசைன் கூறினார். 

Tags:    

Similar News