கிரிக்கெட் (Cricket)

இந்தியாவின் பி டீமை வெல்லவே பாகிஸ்தான் கடுமையாக போராட வேண்டும்: சுனில் கவாஸ்கர்

Published On 2025-02-25 16:11 IST   |   Update On 2025-02-25 19:21:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
  • பாகிஸ்தானின் சமீபத்திய பார்ம் கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது என்றார்.

புதுடெல்லி:

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.

இதையடுத்து, பாகிஸ்தான் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் பி டீமை வெல்லவே பாகிஸ்தான் வழி கண்டுபிடிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தான் அணியின் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி பார்க்கும்போது கொஞ்சம் கவலையாக தான் இருக்கிறது.

தற்போது அவர்களுடைய பார்மை வைத்துச் சொல்ல வேண்டுமெனில் நிச்சயம் அவர்களுக்கு இந்தியாவின் பி டீம் கூட சவாலாகவே இருக்கும். இந்தியாவின் சி அணியைப் பற்றிச் சொல்ல முடியாது. ஆனால் பி அணிக்கு பாகிஸ்தானை வீழ்த்த அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.

முகமது ரிஸ்வான் முதல் பந்தையே பவுண்டரி அடித்தார். உடனே பாகிஸ்தான் அணியின் அணுகுமுறை மாறுமோ என நினைத்தேன், ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பாகிஸ்தான் அணியின் தனித்திறமை அவர்களது விளையாட்டை பார்க்கும்போதே தெரியும். இந்த முறை அப்படி எதுவும் தெரியவில்லை.

பாகிஸ்தான் அணியில் இளமையான, திறமையான வீரர்கள் ஆரம்ப காலத்தை போல இணையாமல் இருப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி இருக்கிறது. அதன்மூலம் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்வர் என எதிர்பார்க்கிறேன்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தரமான இளம் வீரர்களை இந்திய அணி உருவாக்குவதை பார்த்திருப்பீர்கள். ஐ.பி.எல், ரஞ்சி டிராபியில் விளையாடுவதன் காரணமாகவே அவர்களுக்கு நல்ல வீரர்கள் கிடைக்கிறார்கள். எனவே அவர்களை போல பாகிஸ்தானும் நல்ல வீரர்களைத் தேர்வு செய்யவேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News