கிரிக்கெட் (Cricket)

குடும்பத்தினர் தங்குவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டில் மாற்றமில்லை- பிசிசிஐ அதிரடி

Published On 2025-03-20 07:01 IST   |   Update On 2025-03-20 07:01:00 IST
  • வீரர்கள் தங்களின் கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது.
  • வீரர்களுடன் குடும்பத்தினரை அனுமதிப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட தற்போதைய விதிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை.

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் வெளிநாட்டு தொடர்களின் போது, வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்தார். 'போட்டி முடிந்த பிறகு அறைக்கு சென்று தனியாக சோகத்தில் இருக்க விரும்பவில்லை. களத்தில் சரியாக செயல்படாத சூழலில், குடும்ப உறுப்பினர்கள் உடன் இருக்கும் போது அத்தகைய ஏமாற்றத்தில் இருந்து சீக்கிரம் வெளிவர முடியும். குடும்பத்தினருடன் இருக்கும் முக்கியத்துவத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கோலியின் ஆட்சேபனை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா பதில் அளிக்கையில் 'வீரர்களுடன் குடும்பத்தினரை அனுமதிப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட தற்போதைய விதிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை. இது இந்திய அணிக்கும், நமது கிரிக்கெட் வாரியத்திற்கும் மிகவும் முக்கியமானது. வீரர்கள் தங்களின் கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது. அவர்களுக்கு சில மனக்கசப்புகள் அல்லது மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் இந்த விதிமுறை அணியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

இந்த விதிமுறை ஒரே நாள் இரவில் உருவாக்கப்பட்டது அல்ல. இத்தகைய நடைமுறை பல ஆண்டுகளாகவே உள்ளது. அவற்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இதற்கிடையே, ஐ.பி.எல். 10 அணிகளின் கேப்டன்களுடன் கிரிக்கெட் வாரியம் மும்பையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. பந்தை பளபளப்பாக்க அதன் மீது எச்சில் தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து கேப்டன்களிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப முடிவு செய்யப்பட உள்ளது.

Tags:    

Similar News