கிரிக்கெட் (Cricket)

அவுட் இல்லை.. ஆனால் அவுட்.. சர்ச்சையை ஏற்படுத்திய ஜெய்ஸ்வால் விக்கெட்.. வைரல் வீடியோ

Published On 2024-12-30 06:03 GMT   |   Update On 2024-12-30 06:03 GMT
  • ஜெய்ஸ்வால் 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.
  • அவரது விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மெல்போர்ன்:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

105 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 83.4 ஓவரில் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன் இலக்காக இருந்தது. இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 340 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.

மதிய உணவு இடை வேளைக்குள் 33 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் கம்மின்ஸ் பந்திலும், விராட் கோலி 5 ரன்னில் ஸ்டார்க் பந்திலும் வெளியேறினார்கள்.

அதனை தொடர்ந்து ரிஷ்ப பண்ட் 30, ஜடேஜா 2, நிதிஷ் குமார் 1 என வெளியேறினர். இதனையடுத்து ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தார் ஜோடி சேர்ந்து பொறுமையுடன் விளையாடினர்.

இந்நிலையில் 70-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் ஜெய்ஸ்வாலுக்கு பவுன்ஸ் பந்தை வீசினார். இதனை அடிக்க ஜெய்ஸ்வால் முற்பட்ட போது பந்து கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. உடனே நடுவரிடம் அவுட் என ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர். இதனை நடுவர் நிராகரித்தார். உடனே கம்மின்ஸ் ரிவ்யூ கேட்டார்.

இதனையடுத்து 3-ம் நடுவர் இதனை சோதித்தார். அப்போது அல்ட்ரா எட்ஜ்-ல் பார்க்கும் போது அவுட் இல்லை என வந்தது. ஆனால் பந்து பேட்டை நெருங்கும் போது பேட்டிலும் கையுறையிலும் தொட்டுச் செல்லும் மாதிரி இருந்தது. மேலும் பேட்டை கடந்த பின்னர் பந்து சென்ற திசையில் மாற்றம் இருந்தது. இருந்ததையடுத்து 3-ம் நடுவர் அவுட் என தெரிவித்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத ஜெய்ஸ்வால் கள நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் அவரை சமாதானப்படுத்தி அவுட் என கூறி வெளியேறுமாறு கூறினர். அல்ட்ரா எட்ஜ்-ல் அவுட் இல்லை என வரும்போது எப்படி 3-ம் நடுவர் அவுட் கொடுத்தார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News