இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வெல்ல வேண்டுமா? ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது இதுதான்
- இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஐ.சி.சி.-யின் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை ஒரு போட்டியில் கூட டாஸ் வென்றதில்லை. அந்த வகையில், இந்திய அணி இறுதிப் போட்டியில் டாஸ் வெல்வது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மனம்திறந்து பேசியுள்ளார்.
அப்போது, "என்னை பொருத்தவரையில், இந்திய அணி டாஸ் வெல்ல கூடாது. அவர்கள் தோற்க வேண்டும் என்று தான் நான் கூறுவேன், நியூசிலாந்து அணி என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யட்டும். இது இந்தியாவை தந்திர சூழலில் தள்ளும். இந்தியா இதுவரை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது, வெற்றிகரமாக பந்துவீசியும் இருக்கிறது."
"தனிப்பட்ட முறையில், நான் இந்தப் போட்டி 54-46 என்ற கணக்கில் இந்தியாவுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கிறேன். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளனர், அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த அணி," என்று தெரிவித்தார்.