இந்திய அணியில் சூப்பர்ஸ்டார் கலாச்சாரம் இருக்கவே கூடாது - ரவிச்சந்திரன் அஷ்வின்
- ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
- நாம் சூப்பர்ஸ்டார்கள் அல்ல, விளையாட்டு வீரர்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தது முதல் ரவிச்சந்திரன் அஷ்வின் சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், யூடியூப் தளத்தில் தொடர்ச்சியாக பேசி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இதன் பிறகு, அடிக்கடி கருத்து தெரிவித்து வரும் அஷ்வின் சமீபத்தில், இந்திய அணியில் உள்ள நட்சத்திர கலாச்சாரத்திற்கு எதிராக பேசியிருந்தார். அப்போது, வீரர்கள் மக்களுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்ள நிதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் இந்தி மொழி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஷ்வின் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "இந்திய கிரிக்கெட்டில் விஷயங்களை இயல்பாக்குவது முக்கியம். இந்திய கிரிக்கெட் அணிக்குள் சூப்பர் ஸ்டார் மற்றும் சூப்பர் பிரபலங்களை நாம் ஊக்குவிக்கக்கூடாது. எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நாம் இயல்பாக்க வேண்டும். நாம் கிரிக்கெட் வீரர்கள்."
"நாம் நடிகர்கள் அல்லது சூப்பர் ஸ்டார்கள் அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள், மேலும் பொது மக்கள் எதிரொலிக்க வேண்டிய, தங்களை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்," என்று கூறினார்.