சாம்பியன்ஸ் டிராபி: பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ராணாவா? அர்ஷ்தீப் சிங்கா? ரிக்கி பாண்டிங் பதில்
- புதிய பந்தில் ராணா எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஹர்ஷித் ராணா
- ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு ஏற்படுத்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மேலும் பும்ராவுக்கு பதில் இடது கை வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்வேன் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டி 20 கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு அபாரமாக பந்து வீசினார் என்று அனைவருக்கும் தெரியும். அர்ஸ்தீப் சிங்கிடம் நல்ல திறமை இருக்கிறது. பும்ரா போல் அவரால் பந்து வீச முடியும். புதிய பந்தையும், பழைய பந்தையும் பயன்படுத்தி அர்ஸ்தீப் சிங் சிறப்பாக செயல்படுவார். இதனால் பும்ராவுக்கு பதில் அர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்த வேண்டும்.
இதற்காக ஹர்ஷித் ராணாவை நான் குறை சொல்லவில்லை. அவரிடமும் நிறைய திறமை இருக்கின்றது. புதிய பந்தில் அவர் எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆட்டத்தின் டெத் ஓவரில் பந்து வீச முடியாது என்பது உண்மையே. ஏனென்றால் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் முறை என்பது முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். அவர்களால் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்த முடியும்.
அது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். எனவே நான் கேப்டன் ஆக இருந்தால், அர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்துவேன்.
என்று பாண்டிங் கூறியுள்ளார்.